Last Updated : 08 Apr, 2019 12:00 AM

 

Published : 08 Apr 2019 12:00 AM
Last Updated : 08 Apr 2019 12:00 AM

பட்டமேற்படிப்பு படிப்பதற்கு ரூ.40 லட்சத்துக்கு உத்தரவாதம்; கடுமையான விதிமுறையால் தவிக்கும் அரசுசாரா டாக்டர்கள்: தமிழக அரசு தலையிடக் கோரிக்கை

மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் சேர்ந்து படிக்க ரூ.40 லட்சம் உத்தரவாதத்துக்கு அரசு அதிகாரிகளின் கையெழுத்துடன், அவர்களின் ஆதார் மற்றும் பான் கார்டு நகல்களை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையால் அரசுசாரா டாக்டர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்டி, எம்எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணாசாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இதில்996 இடங்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் 421 பேரும் அரசுசாரா டாக்டர்கள் 575 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு டாக்டர்கள் பட்டமேற்படிப்பு படிக்க எவ்வித கடுமையான விதிமுறைகளும் இல்லை. ஆனால், அரசுசாராடாக்டர்கள் படிக்க வேண்டுமானால் அரசு தரப்பில் ஒப்பந்தம் போடப்படும். அதில் படிப்பு முடிந்த பின்னர், அரசு மருத்துவமனையில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம்வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவைதவிர ஒப்பந்தத்தில் ரூ.40 லட்சம் வரையிலான உத்தரவாதத்துக்கு 2 அரசிதழ் பதிவு பெற்றஅதிகாரிகள் (அரசு அதிகாரி) மற்றும் அரசிதழ் பதிவு பெறாதவரிடம் கையெழுத்து பெற வேண்டும். மேலும், அவர்களின் ஆதார் கார்டு,பான் கார்டு நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த கடுமையான விதிமுறைகளால் இடம் கிடைத்தும் அரசுசாரா டாக்டர்கள் தவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அரசுசாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது:

அரசுசாரா டாக்டர்கள் மருத்துவப் பட்டமேற்படிப்புகள் படிக்க கல்லூரிகளில் சேர்ந்த ஒருவாரத்தில் ஒப்பந்த நடைமுறைகள் அனைத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும். வசதியானவர்கள், பெற்றோர் அல்லது உறவினர்கள் அரசு அதிகாரிகளாக இருந்தால் எப்படியோ சமாளித்து ரூ.40 லட்சத்துக்கு உத்தரவாதத்துக்கான கையெழுத்து வாங்கிவிடலாம். ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர், தாய், தந்தை இல்லாதவர்களால் எப்படி கையெழுத்தையோ அல்லது ஆதார் கார்டு, பான் கார்டு நகலையோ எப்படி வாங்க முடியும்.

ஏழைகள் மேற்படிப்பு படிக்கவரக்கூடாது என்பதற்காகதான் இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்றசந்தேகம் எழுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை தளர்த்தி, அரசு டாக்டர்களுக்கு என்ன மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதே மாதிரியான விதிமுறைகளை அரசுசாரா டாக்டர்களுக்கும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) அதிகாரிகளிடம் கேட்ட போது, “அரசின் விதிமுறைகள் அப்படி இருக்கிறது. எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், எப்படியோ கஷ்டப்பட்டு கையெழுத்து வாங்கி வந்துவிடுகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x