Published : 16 Apr 2019 10:35 AM
Last Updated : 16 Apr 2019 10:35 AM

வெயிலில் தவிக்கும் மக்களை வரவேற்கிறது `குளு குளு ஊட்டி!

’இப்பவே கண்ண கட்டுதே' என்று ஏப்ரல் மத்தியிலேயே கோடை வெயிலால் தவிக்கின்றனர் பொதுமக்கள். மே மாதம், அக்னி நட்சத்திரத்தை நினைத்தாலே உடல் நடுங்குகிறது. இப்படி வெயிலால் வாடி வதங்கும் மக்களை வரவேற்கிறது `குளு குளு' ஊட்டி. இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற உதகை (ஊட்டி) அமைந்திருப்பது மலை மாவட்டமான நீலகிரியில்.

எழில் கொஞ்சும் மலைகள், பச்சை நிறக் கம்பளம் விரித்ததுபோன்ற புல்வெளிகள், வனப் பகுதிகள், எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலைத் தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், அணைகள், உதகை, குன்னூர், கோத்தகிரியில் உள்ள பூங்காக்கள், உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் என வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகளை கவர்பவை அதிகம்.

கோடை சீசன் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி,  ஜூன் முதல் வாரம் வரை இருக்கும். சீசனுக்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை  மகிழ்விப்பதற்காக மலர்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு கண்காட்சி, போட்டிகள், கலை விழாக்கள் என கோடை விழா களைகட்டும்.

தாவரவியல் பூங்கா

உதகை அரசு தாவரவியல் பூங்கா 1897-ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இங்கு பல வகை வண்ண மலர்கள் மட்டுமின்றி, 20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரம், பசில் மரங்கள், இத்தாலி  பூங்கா, மிதக்கும் ஜப்பான் பூங்கா, பெரணி இல்லம், ஆர்கிட் மலர் கண்ணாடி மாளிகை என வியப்பூட்டும் பல உண்டு.

அடுத்த மாதம் இங்கு நடைபெறும் மலர்க்  கண்காட்சியில்,  பல லட்சம் மலர்களை சுற்றுலாப்  பயணிகள் கண்டு ரசிக்கலாம்.  உதகை நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்காவுக்கு, பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சர்க்யூட் பேருந்து, நகரப்  பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்லலாம்.

4 ஆயிரம் ரோஜா வகைகள்!

இதேபோல,  நூற்றாண்டு கண்ட உதகை ரோஜாப்  பூங்காவில்  4 ஆயிரம் ரோஜா வகைகளும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. ஆண்டுதோறும் மே மாதம்  ரோஜா கண்காட்சியும்  நடத்தப்படுகிறது. இந்த பூங்காவில், நீலம், ஊதா, பச்சை நிறங்களைக் கொண்ட ரோஜா மலர்களும், ஹைப்ரிட் ரோஜாக்கள், மினியேச்சர் ரோஜாக்களும் அதிகம்  நடவு செய்யப்பட்டுள்ளன.

உதகை படகு இல்லம் எதிரே உள்ள  மரவியல் பூங்காவில்,  பல வகையான மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ரோஜா பூங்கா, மரவியல் பூங்காவுக்கு,  உதகை மத்திய பேருந்து நிலையம், ஏடிசி மற்றும் சேரிங்கிராஸ் பகுதிகளில் இருந்து எளிதாக ஆட்டோ மூலம் செல்லலாம்.

தொட்டபெட்டா காட்சி முனை

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா காட்சி முனை, கடல் மட்டத்திலிருந்து 2,623 மீட்டர் உயரத்தில் உள்ளது. நீலகிரி பகுதிகளை மட்டுமின்றி,  சூரியன் மேற்கில் மறைவதைக் காணவும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். உதகையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொட்டபெட்டா சிகரத்துக்கு தனியார் கார்கள், சர்க்யூட் பேருந்துகள் மூலம் செல்லலாம்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பல வகை மரங்கள், மலர்ச் செடிகள், சிறிய படகு இல்லம்,  ருத்ராட்ச மரம், குறிஞ்சி மலர்கள், காட்டு சூரியகாந்தி பூச்செடிகள், படகு சவாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக்  கவர்கின்றன.  கோடைவிழாவை இங்கு நடைபெறும் பழக் கண்காட்சி பிரசித்திப்பெற்றது.

உதகை அடுத்துள்ள பைக்காராவில், மலைகளின் நடுவே உள்ள அணையில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளில் செல்ல சுற்றுலாப்  பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். உதகையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி உள்ளன.

இதுதவிர, உதகை-மைசூரூ சாலையில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, குன்னூரிலிருந்து 7 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள லாஸ் நீர்வீழ்ச்சி, குன்னூர்-குந்தா சாலையில் காட்டேரி நீர் வீழ்ச்சி, உதகை-கூடலூர் சாலையில் பைக்காரா நீர்வீழ்ச்சி, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில்  கேத்ரின் நீர்வீழ்ச்சி, மாயாறு நீர்வீழ்ச்சியும் கண்ணைக் கவர்பவை.

கோத்தகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடநாடு காட்சி முனையிலிருந்து தெங்குமரஹாடா, பவானி அணை, ரங்கசாமி மலையைக் காணலாம். இதேபோல, கூடலூர் அருகேயுள்ள ஊசி மலை காட்சி முனை,  தவளை மலை காட்சி முனை, டால்பின்ஸ் நோஸ் காட்சி முனை, லேம்ஸ் ராக் காட்சி முனைகளும் உள்ளன.

யானை சவாரி!

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி, வனத்துறை சார்பில் அழைத்துச் செல்லப்படும் வனச்சுற்றுலா பிரசித்திப் பெற்றவை. மசினகுடியிலிருந்து தனியார் வாகனங்களில் முதுமலை சென்று, அங்குள்ள இயற்கை அழகையும், வன விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.

இவற்றையெல்லாம்விட, யுனஸ்கோவின்  பாரம்பரிய அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயிலே சுற்றுலாப்பயணிகளைப் பெரிதும் கவர்கிறது.  அடர்ந்த காடுகளின் நடுவே வளைந்து நெளிந்து செல்லும்  இந்த ரயிலில் பயணிக்க,  உள்நாட்டவர் மட்டுமின்றி,  வெளி நாட்டவரும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

தங்கும் வசதியும், உணவு வகைகளும்...

உதகை மற்றும் குன்னூர் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் உள்ளன. நாளொன்றுக்கு ரூ.400 முதல் ரூ.15,000  வரை பல வகையிலான கட்டணங்களில் அறைகள் கிடைக்கின்றன. தங்களது வசதிக்கேற்ப அறைகளை எடுத்து தங்கலாம். ஹோட்டல்கள் மற்றும் காட்டேஜ்களிலேயே சுற்றுலாத்  தலங்களை சுற்றி பார்க்கவும் வாகன வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஒரு நபருக்கு  குறிப்பட்ட தொகை வசூலிக்கப்பட்டு,  அனைத்து சுற்றுலாத் தலங்களையும் காண்பிக்கும் `பேக்கேஜ் டூர்' முறையும் உள்ளது.

உதகையை பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். சைனீஸ், பஞ்சாபி. நார்த் இண்டியன், செட்டிநாடு, ஆந்திரா, சவுத் இண்டியன் வகை உணவு வகைகள் கிடைக்கும். நட்சத்திர ஹோட்டல்களில் இந்த அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட  வகை உணவுக்காக சிறப்பு பெற்ற ஹோட்டல்களும் உதகையில் உள்ளன. சீன உணவுக்கு புகழ்பெற்ற ‘ஷின்கோஸ்’ உணவகம் உள்ளது. இது சீனாவைச் சேர்ந்த தம்பதிகளால் நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x