Published : 02 Apr 2019 03:13 PM
Last Updated : 02 Apr 2019 03:13 PM

நீட் தேர்வு ரத்து- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; தமிழக ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு நிம்மதி: பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி

நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் ரத்து என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது நடுத்தர மற்றும் கிராமப்புற மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திட்டம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவ நுழைவுத்தேர்வு மூலம் ஏராளமான மிகச்சிறந்த மருத்துவ மாணவர்கள் தேர்வு பெற்று மருத்துவம் பயின்றனர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவம் படிக்கத் தேர்வு செய்யும் முறை இந்தியாவிலேயே சிறந்த ஒன்றாக இருந்தது. இதன்மூலம் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பலர் மருத்துவம் பயில முடிந்தது.

ஆனால் திடீரென மத்திய அரசு நீட் எனும் நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்தியது. இது மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயல், இதன்மூலம் வசதி படைத்தோர் மட்டுமே மருத்துவம் பயில முடியும் என்கிற நிலை உருவாகும், மாணவர்கள் பயிலாத ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி அதன்மூலம் தேர்வு செய்வது கல்வி முறைக்கே வைக்கப்படும் வேட்டு என அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் எதிர்த்தனர்.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல ஆளுங்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் நீட் தேர்வை எதிர்த்தார். அதில் இறுதிவரை உறுதியாக நின்றார். ஆனால் அவரது மறைவுக்குப் பின் வந்த அரசு மத்திய அரசின் நீட் தேர்வைப் பெயரளவிற்கு எதிர்த்தது. நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு தமிழகத்தில் வந்தது.

98 சதவீத மதிப்பெண் பெற்ற அனிதா போன்ற மாணவிகள் தேர்வு பெறமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட மிகப்பெரும் அவலம் நடந்தது. இன்றும் கிராமப்புற மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு நீட் தேர்வுப் பயிற்சி எட்டாக்கனி. காரணம் அந்தப் பயிற்சிக்காகவே பல லட்சம் செலவு செய்யவேண்டிய நிலை. இதனால் திறமையுள்ளவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பஞ்சு போர்த்திய ஒரு பெரும் கங்கு இன்றும் நீட்டுக்கு எதிராக கனன்றுகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ், நீட்டை விரும்பாத மாநிலங்களில் அவர்கள் விரும்பும் தேர்வு மூலம் எம்பிபிஎஸ் தேர்வு நடத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிராமப்புற, நடுத்தர மாணவர்கள் இடையே நம்பிக்கை ஊட்டும் அறிவிப்பாக இது பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு சம்பந்தமான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது முற்றிலும் வரவேற்கத்தகுந்த அறிவிப்பு. இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய அட்டவணை 7 மத்திய மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசுகிறது. அதில் பல்கலைக்கழகங்களின் ஒழுங்குபடுத்துதல் என்பது மாநிலங்களின் உரிமை என தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை, கட்டணம் தீர்மானித்தல் எல்லாம் ஒழுங்குபடுத்துதல் கீழ்வரும் என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.  பல்கலைக்கழகம், அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அந்த மாநில அரசுதான் தீர்மானிக்க முடியும். இதுதான் அரசியலமைப்பு. அதை மீறித்தான் நீட் திணிக்கப்பட்டது. அதை ரத்து செய்யும் அறிக்கை நிச்சயம் வரவேற்கபடவேண்டிய ஒன்று.

நீட், மாநிலத் தேர்வு என்ன வித்தியாசம்?

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் முழுமையாக கொடுக்கக்கூடிய பாடத்தைப் பயின்றுதான் தேர்வு எழுதுகிறார்கள். நியாயமாகப் பயின்று தேர்வு எழுதுபவர்கள் எந்த அளவுக்குப் பயின்றார்கள் என்பதை கணக்கிட்டுதான் மதிப்பெண் வழங்கப்படுகிறது.

அந்த மதிப்பீட்டுச் சான்றை தகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது, அது தகுதி கிடையாது, பயிற்சி மையத்தில் கொடுக்கப்படும் பாடத்தை வைத்து தேர்வு எழுதி தேர்வு பெற வேண்டும், அதுதான் தகுதி என்று சொல்வது பள்ளிக்கல்வி முறையையே கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும்.

16-லிருந்து 18 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த அளவிற்கு பாடத்தை உள்வாங்க முடியுமோ அந்த அளவுக்குத்தான் பாடத்திட்டத்தைக் கொடுக்க முடியும். 18 வயதிற்கு அப்பாற்பட்டு கல்லூரியில் பயிலும்போது உள்ள புரிதல், அதற்குள்ள தகுதியை வைத்துப் பாடத்திட்டத்தை திணிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறையாகத்தான் நீட் தேர்வைப் பார்க்கிறோம். அது வடிகட்டி வெளியேற்றும் தேர்வு. எனவே அதை ரத்து செய்து மாநில அரசின் அதிகாரத்தில் கொடுப்போம் என்கிற அறிவிப்பு வரவேற்கக்கூடிய ஒன்று.

நாளை பெரும்பான்மையில்லாத அரசு அமையுமேயானால் அது நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ளதா?

ஒரு அரசமைப்புச் சட்டத்தை சரியாகப் புரிந்துகொண்டு, அதை உரிய முறையில் நீதிமன்றங்களுக்கு விளக்கியிருந்தால் நீட் தேர்வே வந்திருக்காது.

அரசியலமைப்புச் சட்டமும் இந்த அதிகாரத்தை மாநில அரசிற்கு தருகிறது, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92வது அறிக்கையிலும் விரும்பாத மாநிலங்களை விலக்கி வைக்க பரிந்துரைத்திருந்தது. எந்தெந்த மாநிலங்கள் விரும்பவில்லையோ அந்த மாநிலங்களை நீட் வளையத்துக்குள் கொண்டுவரவேண்டிய அவசியமில்லை என்று சொல்லியிருக்கிறது. அதை மத்திய அரசு பரிசீலிக்கவே இல்லை.

வரக்கூடிய அரசு அதைப் புரிந்துகொள்ளும்போது மாநில அரசின் உரிமைக்கு வழங்கப்படும். முக்கிய விஷயம் ஏற்கெனவே மாநில அரசு நீட்டுக்கு எதிரன சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு இன்னும் போகவில்லை.

சட்டப்பேரவையிலிருந்து சென்றதால் இன்னும் அதற்கு உயிர் உள்ளது. ஏனென்றால் சட்டப்பேரவை இன்னும் உள்ளது. ஆகவே அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி நிறைவேற்றலாம். மக்கள் சார்ந்த கோரிக்கைகளை யார் வாக்குறுதிகளாக கொடுக்கிறார்களோ அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.   

 


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x