Published : 22 Apr 2019 08:30 AM
Last Updated : 22 Apr 2019 08:30 AM

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிக்கு இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வழக்கு காரணமாக அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதற் கிடையே, சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மறைவால் அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 29-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற மே 2-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இடைத்தேர்தல் நடக்கும் 4 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிட உள்ளன.

திமுக சார்பில் பொங்கலூர் நா.பழனிசாமி (சூலூர்), வி.செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), டாக்டர் பி.சரவணன் (திருப்பரங்குன்றம்), எம்.சி.சண்முகய்யா (ஓட்டப்பிடாரம்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இன்னும் ஓரிரு நாளில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

ஒரே நேரத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதால் இதன் முடிவுகள் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அதிமுகவும், ஆட்சி மாற்றத்துக்கு திமுகவும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதால் இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்கட்டமாக மே 1 முதல் 8-ம் தேதி வரை 4 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார். அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மே 3 முதல் 6-ம் தேதி வரையும் பின்னர் மே 10 முதல் 17-ம் தேதி வரையும் இரு கட்டங்களாக பிரச்சாரம் செய்கிறார். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.

திமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி (திருப்பரங்குன்றம்), முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு (ஓட்டப்பிடாரம்), க.பொன்முடி (அரவக்குறிச்சி), எ.வ.வேலு (சூலூர்) ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்களைக் கொண்ட 83 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x