Published : 24 Apr 2019 09:53 AM
Last Updated : 24 Apr 2019 09:53 AM

நெல்லை அருகே கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்- குளத்து தண்ணீரை நம்பி களமிறங்கிய விவசாயிகள்

திருநெல்வேலி அருகே குப்பக்குறிச்சி பகுதியில் கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டியிருக்கிறார்கள். இங்குள்ள குளத்தில் இருக்கும் தண்ணீரை நம்பி சுட்டெரிக்கும் வெயிலிலும் வேளாண் பணிகளை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த பிசான சாகுபடி பருவத்தில் 58,500 ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ண யிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கை தாண்டி 63,108 ஹெக் டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே அறுவடை பணிகளும் முடிவடைந்துவிட்டது. அவ்வாறு நெல் அறுவடை செய்யப்பட்ட விளைநிலங்களில் உளுந்து பயிரிட்டனர். உளுந்து அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது.

100 ஏக்கரில் பச்சைப்பசேல்

மாவட்டம் முழுக்க பிசான நெல் சாகுபடி பணிகள் நிறைவடைந் துள்ள நிலையில், குப்பக்குறிச்சி பகுதி விளைநிலங்கள் மட்டும் பச்சைப்பசேலென்று காட்சியளிக் கின்றன. இங்கு கோடை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் நீர் இருப்பு கவலை அளிக்கும் நிலையில், குப்பக்குறிச்சி குளத்திலுள்ள தண்ணீரை நம்பி, இப்பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியைத் தொடங்கியுள்ளனர்.

குப்பக்குறிச்சி குளத்தில் தற்போது பாதியளவுக்கு தண்ணீர் இருக்கிறது. இந்த தண்ணீரைக் கொண்டு இப்பகுதியில் 100 ஏக்கர் அளவுக்கு, கடந்த 30 நாட்களுக்கு முன்னரே நாற்று நட்டு நெற்பயிர்கள் வளர்ந்து வருகின்றன.

தற்போது, களையெடுக்கும் பணிகளில் விவசாய கூலித்தொழி லாளர்கள் சுட்டெரிக்கும் வெயி லுக்கு மத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

கோடை நெல் சாகுபடி

குப்பக்குறிச்சியில் 5 ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது:

எங்கள் பகுதிக்கு கார் சாகுபடி கிடையாது. பிசான சாகுபடியும், கோடை நெல் சாகுபடியும் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் திருநெல்வேலி கால்வாய் மூலம் இப்பகுதி குளங்களுக்கு வந்து சேர்கிறது. பிசான சாகுபடியின்போது. குப்பக்குறிச்சி குளத்துக்கு வந்துசேரும் தண்ணீரை கோடை நெல் சாகுபடிக்கு சேமித்து வைத்திருப்போம். பிசான சாகுபடி முடிவடைந்ததும் மற்ற இடங்களில் உளுந்து பயிரிடுவார்கள். நாங்கள் கோடை நெல் சாகுபடி பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

அம்பை ரக நெல்

விவசாயி திருப்பதி கூறும்போது, ``அம்பை 16, 18 மற்றும் 52 ரக நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்கள் வளர்ந்து நெற்கதிர்கள் முற்றுவதற்கு 90 முதல் 105 நாட்கள் வரையில் ஆகும். இதற்கு தேவையான தண்ணீர் குளத்தில் இருக்கிறது. கோடை மழை பெய்தால் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. தற்போது பயிர்கள் நட்டு 35 நாட்கள் ஆகிறது.

பருவமழைக்குமுன் அறுவடை நடைபெறும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x