

தேமுதிக விஜயகாந்தின் மதுரை பிரச்சாரம் 2-வது முறையாக ரத்து செய்யப்பட்டதால் அக்கட்சித் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.
மதுரை தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை மதுரையில் 3 இடங்களில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
மூட்டை கட்டிய தொண்டர்கள்
மேலூர் கக்கன் சிலை சந்திப்பு அருகே பகல் 2 மணியிலிருந்தே தேமுதிக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். சுமார் 2.45 மணிக்கு விஜயகாந்த் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதிர்ச்சியடைந்த தொண்டர்களில் சிலர் அங்கு மறியலில் ஈடுபட்டனர். அதிருப்தியடைந்த தொண்டர்கள் கட்சிக் கொடி, தோரணங்களை அவிழ்த்து மூட்டை கட்டிக் கொண்டு வெறுப்புடன் அங்கிருந்து கிளம்பினர்.
வாகனத்தில் பழுது?
இதையடுத்து திருப்பரங் குன்றத்தில் விஜயகாந்த் தங்கியிருந்த ஹோட்டல் முன் தேமுதிகவினர், பத்திரிகையாளர்கள் திரண்டனர். அப்போது மாவட்டச் செயலரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.டி.ராஜா, வேட்பாளர் சிவமுத்துக்குமார் உள்ளிட்டோர் ஹோட்டலுக்குள் விஜயகாந்தை சந்தித்தனர். நீண்ட நேரத்துக்குப்பின் வெளியே வந்த ஏ.கே.டி.ராஜா, ‘பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் டெம்போ வாகனம் புதன்கிழமை இரவு பழுதாகிவிட்டது. குறிப்பிட்ட நேரத்துக்குள் பழுதுபார்ப்புப் பணிகளை முடிக்க முடியவில்லை. எனவேதான் இன்றைய பிரச்சாரம் மட்டும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. வேறு காரணம் ஏதுமில்லை’ என்றார்.
தேமுதிகவினர் அதிருப்தி
மதுரை தொகுதியில் ஏற்கெனவே மார்ச் 20-ம் தேதி விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதும் அதற்கான ஏற்பாடுகளை தேமுதிகவினர் செய்திருந்தனர். ஆனால் அன்றையதினம் சென்னையில் ராஜ்நாத்சிங் பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் நிகழ்ச்சிக்கு சென்றதால் அன்றைய பிரச்சாரமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதேபோல தற்போது மீண்டும் விஜயகாந்த் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் தேமுதிகவினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
வேட்பாளர் மாற்றமா?
தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமார் ஏப். 2-ம் தேதிதான் பிரச்சாரத்தையே தொடங்கினார்.
இந்நிலையில் விஜயகாந்த் 2-வது முறையாக பிரச்சாரத்தை ரத்து செய்ததால், கடலூரைப்போல மதுரைக்கும் வேட்பாளர் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இதுபற்றி எம்எல்ஏ ஏ.கே.டி.ராஜாவிடம் கேட்டதற்கு, இது புரளி என்றார். வேட்பாளர் சிவமுத்துக்குமாரிடம் கேட்டதற்கு, நான் வெள்ளிக்கிழமை (இன்று) எனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளேன் என்றார்.