

தமிழக நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தமிழ் நாட்டில் 38 தொகுதிகள், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் சரியான வாக்குப்பதிவு நிலவரம் முழுமையாக வர இன்னும் சில மணி நேரங்கள் பிடிக்கும், மதுரையில் 8 மணிவரை வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் அந்த தொகுதி நிலவரமும் முழுமையாக வர நேரமாகும்.
ஆகவே தற்போது 6 மணி நிலவரம் மட்டுமே கணக்கில் கொள்ளமுடியும். தமிழக நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு 69.55 சதவீதம். சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு 71.62% வந்துள்ளது. அதிகபட்சமாக அரூர் தொகுதியில் 86.96% குறைந்தப்பட்சமாக சாத்தூர் தொகுதியில் 60.87% பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிகபட்ச நாமக்கல் தொகுதியில் 78 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தப்பட்ச வாக்குப்பதிவு மத்திய சென்னை 57.07 சதவீதம்.
வாக்குச்சாவடிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. முழுமையான இறுதி கட்ட வாக்குப்பதிவு தகவல் கிடைக்க இரவு 10 மணி ஆகும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல அடுக்கு பாதுகாப்புடன் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.