

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதாக கர்நாடக போலீஸாருக்கு தகவல் சொல்லி தமிழக போலீஸாரின் தூக்கத்தைக் கெடுத்த லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தபோது அவர் மதுபோதையில் உளறியதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இலங்கை தேவாலயங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்களைக் குறிவைத்தும், ஹோட்டல்களிலும் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் பல இடங்களில் வெடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த குண்டுகள் இலங்கை ராணுவம், மற்றும் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்தத் தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நிகழ்த்தியதாக இலங்கை அறிவித்தது.
இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக போலீஸாருக்கு நேற்று மாலை ஐந்தரை மணி அளவில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மஹாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும், ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.
இதை அலட்சியம் செய்யமுடியாது என்கிற நிலையில் கர்நாடக போலீஸ் ஐஜி உடனடியாக தமிழக டிஜிபிக்கு தகவல் கொடுத்தார். மற்ற மாநிலங்களுக்கும் இதேபோன்று தகவல் அளித்தார்.
இவர்கள் குறிப்பாக ரயில் நிலையங்களில் தாக்குதல் நடத்தலாம் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த நிலையில் இதை அலட்சியப்படுத்த வேண்டாம் என்கிற அடிப்படையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பி.களுக்கும், ஆணையர்களுக்கும் கடிதத்தை மேற்கோள் காட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கேட்டுக்கொண்டது.
மேலும் ராமநாதபுரத்தில் ஊடுருவி உள்ளதாகக் கூறப்படும் 19 தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் பணிகளில் உளவுத்துறையும் போலீஸாரும் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் நேற்றிரவு முதல் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் முக்கிய இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் போனில் தகவல் தெரிவித்த லாரி ஓட்டுநரை கர்நாடக போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மதுபோதையில் இதைக் கூறியது தெரியவந்தது. முன்னாள் ராணுவ வீரரான அவர் பெயர் சுந்தரமூர்த்தி என்பதும் தற்போது லாரி ஓட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் இருந்த சுந்தரமூர்த்தி, கற்பனையாக இவ்வாறு தெரிவித்ததாகக் கூறியுள்ளார். கற்பனையில் சொன்னதற்கு இப்போது நிஜத்தில் சிறைவாசம் உங்களுக்கு கிடைக்கப்போகிறது என போலீஸார் அவரைக் கைது செய்தனர். யூகத்தின் அடிப்படையில் தகவல் தெரிவித்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.