Published : 11 Apr 2019 12:00 AM
Last Updated : 11 Apr 2019 12:00 AM

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே வேட்பாளர்கள் எட்டிப்பார்க்காத கிராமம்: அடிப்படை வசதிக்கு அல்லாடும் அவலம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளியங்காடு, எம்.ஜி.ஆர் நகர், மானூர் கிராமங்கள் மூன்று மக்களவைத் தொகுதியின் எல்லையில் இருப்பதால், இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்கப்பெறாமல் அல்லாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கயத்தில் இருந்து ஊத்துக்குளி சாலையில் உள்ளது கத்தாங்கண்ணி பிரிவு. இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் சென்றால், முதலில் வரும் சிற்றூர்தான் வெள்ளியங்காடு. இங்கு இருப்பது மொத்தமே 6 வீடுகள்தான். இதையடுத்துள்ள எம்ஜிஆர் நகரில் சுமார் ஆயிரம் பேரும், மானூரில் 2 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர். இவை மூன்று மக்களவைத் தொகுதிகளும், நான்கு சட்டப்பேரவைத் தொகுதி யில் இணையும் இடமாக உள்ளன.

வெள்ளியங்காட்டில் உள்ள சாலைக்கு இடதுபுறம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கோவை மக்களவைத் தொகுதியிலும், வலதுபுறம் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மக்களவைத் தொகுதியிலும், இவை இரண்டுக்கும் எதிரில் உள்ள சாலையானது காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் உள்ளன. ஊரின் மற்றொரு பகுதி திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மக்களவைத் தொகுதியாக உள்ளது.

வெள்ளியங்காடு கிராமப் பெண்கள் கூறியதாவது: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லையில் அமைந்திருப்பதால் எந்த ஒரு வேட்பாளரும் இங்கு வந்து வாக்கு சேகரிக்க வருவதில்லை. கட்சி பிரதிநிதிகள் மட்டும் இங்கு வந்து வாக்கு சேகரிக்க செல்கின்றனர். இதுவரை கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளரை நாங்கள் நேரில் சந்தித்ததில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்குளி. வெள்ளியங்காடு, எம்.ஜி. ஆர் நகர், மானூர் ஆகிய 3 சிற்றூர்களும், பல்லடம், காங்கயம், திருப்பூர் தெற்கு மற்றும் ஊத்துக்குளி ஆகிய 4 வட்டங்களுக்குள் அடங்கி உள்ளன. இதனால் அரசின் திட்டங்களை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறோம். மக்களுக்கு முறையான குடிநீர் என்பதே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம் தொடர்கிறது என்றனர்.

குடிநீர் இணைப்பு கொடுப்ப திலும் நாச்சிபாளையம், தொட்டி பாளையம், மாணிக்காபுரம், முதலிபாளையம், குப்பனூர் ஆகிய ஊராட்சிகள் மாறி மாறி இருப்பதால், இப்பகுதிகளில் சுத்தமான குடி நீர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. நொய்யல் ஆற்றின் அருகே இந்த கிராமங்கள் இருப்பதால், நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கும் தண்ணீர் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது தான் மிகப்பெரிய அவலம். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மக்களவைத் தொகுதி உறுப்பினர்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதேபோல் காங்கயம் (தனியரசு), பல்லடம் (நடராஜன்) திருப்பூர் தெற்கு (சு. குணசேகரன்), பெருந்துறை (வெங்கடாச்சலம்) ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஆளும் அதிமுகவைச் சேர்ந்தவர்களே உறுப்பினர்களாக இருந்தும், இந்த அவலம் தொடர்கிறது.

‘கடந்த 15 ஆண்டுகளாக காங்கயம் ஊத்துக்குளி இடையே நிரந்தரமாக காலை மற்றும் மாலை வேளைகளில் நகரப்பேருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கிறது’ என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த பூங்கொடி. ‘நடப்பு மக்களவைத் தேர்தலில் யார் எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருவதாக உறுதி அளிக்கிறார்களோ அவர்களுக்கே எங்கள் வாக்கு’ என்கின்றனர் கிராம மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x