

பரபரப்பான வேளையில் நீங்கள் தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க முயலும்போது, அவ்வாறு செய்ய வேண்டாம் என உங்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்தால்...ஆச்சரியப்படாதீர்கள். அந்த குரலுக்கு காது கொடுங்கள். வழிகாட்டுதலை பின்பற்றி நடைமேம்பாலத்தை பயன்படுத்துங்கள்.
ஆனால், அந்த குரல் ரஜினிகாந்தின் சொந்தக்குரல் அல்ல. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், அரசு ரயில்வே போலீஸார் ஏற்பாடு செய்துள்ள மிமிக்ரி கலைஞரின் குரல். ரயில்வே தண்டவாளங்களைக் கடப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் வகையிலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த முயற்சியை போலீஸார் செய்துள்ளனர்.
இது குறித்து அரசு ரயில்வே போலீஸார் கூறியதாவது: "எழும்பூர்-கிண்டி இடைப்பட்ட பாதையே விபத்துகள் அதிகமாக நடைபெறும் பகுதியாக இருக்கிறது. எனவே இந்த மார்க்கத்தில் இருக்கும் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மவுன்ட், பல்லாவரம் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், மக்கள் இத்தகைய பிரச்சாரங்களால் அவ்வளவு எளிதில் ஈர்க்கப்படுவதில்லை. மக்கள் கவனத்தை ஈர்க்க இசையும், பலகுரல் வித்தையுமே சிறந்த வழி என கண்டறிந்தோம். அந்த வகையில், இசைக்கலைஞர் ஆர்.சிவராமன் உதவியை நாடினோம். அதேபோல், ஒரு பலகுரல் கலைஞரையும் பணித்தோம். அவர் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களின் குரலில் பேசி, விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார். ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
பிரச்சாரம் ஒருபுறம் இருக்க, முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே அதிகாரிகள் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தண்டவாளங்களை கடக்கும் பயணிகளைப் பிடித்து எச்சரிக்கின்றனர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தால், தண்டவாள விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் ஜனவரி-செப்டம்பர் இடைப்பட்ட காலகட்டதில் 95 விபத்துகள் நடைபெற்றதாகவும். நடப்பாண்டில் ஜனவரி-செப்டம்பர் இடைப்பட்ட காலகட்டதில் 75 விபத்துகள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.