Published : 03 Apr 2019 07:13 PM
Last Updated : 03 Apr 2019 07:13 PM

‘நீட்’ நம்ப வைத்து கழுத்தை அறுத்த பாஜக, காப்பாற்றும் காங்கிரஸ்: கி.வீரமணி

‘நீட்’ தேர்வு ரத்து, மாநிலப் பட்டியலில் கல்வி எனும் அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்று திக தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

‘நீட்’ தேர்வைப் பொறுத்தவரையில் திராவிடர் கழகம் தொடக்கம் முதலே தனது எதிர்ப்பை பல வடிவங்களிலும் வெளிப்படுத்தியுள்ளது.  தி.மு.க., இடதுசாரிகள் - பல்வேறு  சமுக அமைப்புகளுடன் இணைந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ‘நீட்’டுக்குக் கடும் எதிர்ப்பு இருந்து வந்ததை மத்திய பாஜக அமைச்சர்களே ஒப்புக்கொண்டார்கள்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த வாக்குறுதி?

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘நீட்’டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் ஓர் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால், அதனை மத்திய அரசு கண்டிப்பாகப் பரிசீலிக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இரு சட்டங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு ஒருமனதாக இரு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  அவசர சட்டத்தில் மேலும் பல தகவல்கள் தேவை என்று மத்திய அரசு கேட்டுக்கொண்ட நிலையில், தேவையான தகவல்களையும் தமிழ்நாடு அரசு அனுப்பியும் வைத்தது.

இந்தப் பிரச்சினையில் உள்ள சட்டச் சிக்கல்கள் உண்டா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கையளிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜித்தேந்தர் சிங் அப்பொழுது மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டு, கருத்தும் பெறப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு என்ன கூறியது?

இந்த நிலையில், ‘நீட்’டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது (17.8.2017) ‘நீட்’டை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் சொல்லப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் வாதாடிய துஷார் மேத்தா ‘நீட்’க்கு எதிராகவே பேசினார்.

சட்ட சிக்கல் ஏதுமில்லாத நிலையில், அவசர சட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது என்றும் கூறினார். மாநில அரசின் சார்பிலும் அவ்வாறே கூறப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஒரு கருத்தினைத் தெரிவித்தனர்.

‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ‘நீட்’ தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் என இருதரப்பினரும் பாதிப்படையாமல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதற்கான ஒரு திட்டத்தோடு வருமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

நம்ப வைத்து கழுத்தறுத்த மத்திய அரசு

நல்லது நடக்கும் என்ற எண்ணம் பொது மக்கள் மத்தியிலும், சமுக நீதியில் அக்கறை கொண்டவர்கள் மத்தியிலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியூட்டும் ஒரு கீழிறக்கச் சிந்தனையோடு மத்திய அரசு நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டது.

மிகவும் கண்டனத்துக்கும், காலாகாலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களால் சமுகநீதியாளர்களால் வெறுக்கப்படக் கூடிய வகையில் மத்திய பாஜக அரசு நடந்துகொண்டது.

உச்சநீதிமன்றமும் நடந்துகொண்டது சரிதானா?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்த அன்று (22.8.2017) மத்திய அரசு சார்பில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட - உறுதியளித்ததற்கு முற்றிலும் மாறாக, தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் இல்லை என்று கூறப்பட்ட அந்த நிலையிலேயே, தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்ற வழக்குரைஞரின் கருத்தினையும்கூடக் கேட்காமலேயே, மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் வழக்கினை முடித்து வைத்தது. அதைவிடப் பெரும் அதிர்ச்சியாகும்.

அரசு என்ற முறையில் மத்திய பாஜக அரசு நடந்துகொண்டதும், நீதிமன்றம் என்ற முறையில் உச்சநீதிமன்றம் நடந்துகொண்ட முறையும் அதற்கு முன் எப்பொழுதும் நடந்திராத அசாதாரண செயல்பாடாகும்.

தமிழ்நாடு அரசு அதன்மீது மேல்முறையீடு செய்யாமல் மத்திய அரசின் கண்ணசைவிற்கு அடங்கிவிட்டது.

தி.மு.க. கொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

இதே உச்சநீதிமன்றம் தி.மு.க. தொடர்ந்த வழக்கில் 2013-ல் கூறியது என்ன? தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் நீதிபதி விக்ரமஜித் சென் மற்றும் ஏ.ஆர்.தவே அடங்கிய அமர்வில், ஏ.ஆர்.தவேவைத் தவிர்த்துப் பெரும்பான்மை நீதிபதிகள் கூறிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 15, 26, 29, 30 ஆகிய பிரிவுகளின்படி இந்திய மருத்துவக் கவுன்சிலுக்குத் தேர்வு நடத்தும் அதிகாரம் இல்லை என்று கூறி, ‘நீட்’ தேர்வை ரத்து செய்தது. காங்கிரஸ் ஆட்சி போய், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில்தான் இந்தத் தீர்ப்புக்குமேல் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

எந்த நீதிபதி ஏ.ஆர்.தவே ‘நீட்’ வழக்கில் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினாரோ, அந்த நீதிபதி தலைமையிலேயே ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்டு, ‘நீட்’ தேர்வு செல்லும் என்ற தீர்ப்புப் பெறப்பட்டதை (16.3.2016) என்னவென்று சொல்வது.

இதுதான் நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பதாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சமுகநீதி என்பது ஆளும் அதிகார வர்க்க உயர்ஜாதிப் பிரிவினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது.

இடங்களை அள்ளிச் சென்றது சி.பி.எஸ்.இ.வகையறாக்கள்!

அதன் விளைவுதான் அரியலூர் அனிதா, பெருவளூர் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீக்களின் தற்கொலைகள்! திருத்துறைப்பூண்டி கிருஷ்ணன், சிங்கம்புணரி கண்ணன் ஆகிய தந்தையார் மரணங்களும் ஆகும்.

‘நீட்’ தேர்வு எழுதிய 75,000 தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் வெறும் 300 மட்டுமே.

ஆனால், சி.பி.எஸ்.இ. வழியில் படித்த மாணவர்கள் 9,000 பேர் எழுதியதில், 4,500 மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிட்டது.  ஏனெனில், ‘நீட்’ தேர்வு கேள்வி என்பது, சி.பி.எஸ்.இ. கல்வி அடிப்படையில்தான் தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்து இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகளை நன்கு அறியலாம்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையும் - ‘நீட்’ தேர்வு ரத்தும்

இந்த நிலையில், வாராது வந்த மாமணிபோல, இருட்காட்டில் ஒளிவெள்ளம் பாய்ந்ததுபோல, நம்பிக்கை நட்சத்திரமாக  காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் ‘நீட்’ தேர்வு விரும்பாத மாநிலங்களில் ‘நீட்’ தேர்வு இருக்காது என்ற உத்தரவாதத்தினை அளித்துள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் பால்வார்க்கும் இந்த அரும்பெரும் அறிவிப்புக்காக, சமுகநீதிச் சிந்தனைக்காகக் கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்களின் சார்பாக நன்றியறிதலோடு கூடிய பாராட்டினைப் பலபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதோடு, நாம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைக்குக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பச்சைக் கொடி காட்டியது மேலும் பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதாகும்.

இதன்மூலம் மாநில உரிமையை மதிக்கும் உணர்வைக் காங்கிரஸ் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. பள்ளிக் கல்வி மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாகக் கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதும் அவசியமாகும்.

காலத்துக்கேற்ற வகையில் காங்கிரசின் மாற்றம் வரவேற்கத்தக்கது

காலத்துக்கேற்ற மாறுதலுக்குக் காங்கிரஸ் தன்னை உட்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதன் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையேற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் என்பது இதன்மூலம் பெறப்படுகிறது.

காங்கிரஸ் அணி வெல்லட்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்தான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் (பகுஜன்). பலவகைகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை வகுப்பதிலும், சட்டங்களை வகுப்பதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை அமைக்கச் செய்வதில் இந்த வெகுமக்களுக்குக் கூடுதல் பொறுப்பும், கடமையும் நிச்சயம் இருக்கிறது.

பாசிசம் ஒழியட்டும்,  பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வீழட்டும். 17-ம் மக்களவைத் தேர்தலில் இந்த வெகுமக்கள் கண்ணும் கருத்துமாக இருந்து  ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வெற்றி சங்கு முழங்கிட, பாடுபட உறுதியேற்போம்”  இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x