Published : 13 Apr 2019 05:49 PM
Last Updated : 13 Apr 2019 05:49 PM

மதச் சமூகத்தின் பயன்களை சங் பரிவார் அறுவடை செய்யும்; திராவிடக் கட்சிகள் சாதியை வைத்துதான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன: இயக்குநர் பா.ரஞ்சித் விளாசல்

சாதி உணர்வு மேலோங்கிய தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்தைப் பற்றியும் இயக்குநர் பா.ரஞ்சித் விவாதங்களுக்குள் இழுத்தார். 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்காக அவரைப் பேட்டி கண்ட போது அரசியல் சீர்திருத்தங்களுக்கு முன்பாக சமூகச் சீர்திருத்தங்களே முக்கியமானது என்று வலியுறுத்தினார்.

மேலும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மதச் சமூகத்தின் பயன்களை சங் பரிவாரங்கள் மட்டுமே அறுவடை செய்யும் என்று எச்சரித்தார்.

தன் திரைப்படமாகட்டும் அல்லது தனது நீலம் பண்பாட்டு மையமாகட்டும் சமூக-பண்பாட்டு மாற்றங்களுக்காகவே பணியாற்றுவோம் என்கிறார் ரஞ்சித்.

இந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

''சமூக சீர்திருத்தமே என் நோக்கம். என்ன தேவை என்பதையே அம்பேத்கரும், காந்தியும் விவாதித்தனர்: அதாவது அரசியல் சீர்திருத்தமா, சமூக சீர்திருத்தமா, எது முக்கியம் என்று விவாதித்தனர். சமூக சீர்திருத்தம் இல்லாமல் உண்மையான அரசியல் சீர்திருத்தங்கள் இல்லை. ஆனால் சமுதாயச் சீர்திருத்தங்களின் நிலைமை இப்போது என்ன? அனைவரும் விரைவில் வரும் விரைவில் வரும் என்கின்றனரே தவிர எங்கு நிகழ்கிறது? நாங்கள் பெரிய கலாச்சார, சமூக மாற்றங்களுக்காகப் பணியாற்றி வருகிறோம்.

இங்கு என்ன பண்பாடு உள்ளது, தலித்துகள் இசைக்கு அங்கீகாரம் உள்ளதா? மக்களிடத்தில் தன்னம்பிக்கையையும் நம்பிக்கையையும் விதைக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம் நாம். தாழ்த்தப்பட்ட சாதியினர் ‘ஒடுக்கப்பட்டவர்’, ‘உரிமையற்றவர்கள்’, ‘உடைந்தவர்கள்’ என்று குறிப்பிடுகிறோம். இப்படித்தான் அரசியல் கட்சிகள் நீண்டகாலமாகக் குறிப்பிடுகின்றனர். இதற்கு தங்களை சுதந்திரவாத, முற்போக்கு சிந்தனையுடையவர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களும் விதிவிலக்கல்ல. இப்படி அழைப்பதன் மூலம் அவர்களின் கூட்டு எழுச்சியைச் சாத்தியமாக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடையாளத்தை ஏற்படுத்துகின்றனர்.

பாஜக சாதி/ மதவாதக் கட்சி. இவர்கள் சாதியையும் மதத்தையும் ஊக்குவிப்பவர்கள். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் முற்போக்குவாதிகள் என்று நாம் நம்புபவர்கள் தலித்துகளை ரிசர்வ் தொகுதிகளுக்கு அனுப்புவது ஏன்? முஸ்லிம்கள் மற்றும் பெண்களை நிறுத்தாதது ஏன்? திராவிடக் கட்சிகள் சாதி ஆட்களையே தங்கள் வேட்பாளர்களாக நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எப்போது இந்த சிஸ்டம் மாறும்?

அட்டகத்தி, பரியேறும் பெருமாள், அம்பேத்கர்:

'அட்டகத்தி' படம் எடுத்த போது ’அம்பேத்கர் படத்தைக் காட்டுவது மதுரை ஆட்களுக்குப் பிடிக்காது’ என்று என்னிடம் ஒருவர் சொன்னார்.  நான் ‘மெட்ராஸ்’ படம் எடுத்த போது நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் என் மீது முழு நம்பிக்கை வைத்தனர்.

'பரியேறும் பெருமாள்' படத்தின் கதாபாத்திரம் தான் அம்பேத்கராக விரும்புகிறேன் என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்ட போது மாரி செல்வராஜுக்குப் பிரச்சினைகள் வந்தன. தயாரிப்பாளர்களுக்கு படத்தைப் பற்றிக் கூறிய போது  இரண்டு பேருக்குப் பிடிக்கவில்லை, இது படத்தின் வசூலைப் பாதிக்கும் என்றனர்.  ஆனால் இவர்கள் சாதிச்சார்புடையவர்கள் அல்ல. ஆகவேதான் நான் படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தேன்.

அதாவது படத்தை சுவாரஸ்யமாகக் கொடுத்தால் நிச்சயம் மக்களிடம் எந்தக் கதைக்கும் வரவேற்பு இருக்கும் என்பதை ஒரு மாடல் ஆக்கவே நான் அந்தப் படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தேன்.

மத்தியதர வர்க்கத்தினர், தாரளமய முற்போக்கு வாதிகள் தலித் சமுதாயத்தினரின் தீவிர கோரிக்கைகள் எந்தக் கட்டத்தில் எழுந்தாலும் அதனை முறியடிக்க முயற்சி செய்கின்றனர்.  கோரிக்கைகளை காலவரையற்று ஒத்திப் போடுவதையே அவர்கள் விரும்புகின்றனர், காரணம் மைய நீரோட்டம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று விரும்புகின்றனர். தலித்துகள் இத்தகைய முற்போக்கு அரசியல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு தலைவர் மத ரீதியாக, சாதி ரீதியாக சமுதாயத்தைப் பிளக்கும் செயலில் ஈடுபட்டால் முற்போக்குவாதிகள் அந்தத் தலைவரை, அவர் கட்சியை தாக்கிப் பேசுகின்றனர். ஆனால் இதே தலைவரே பொதுப்பிரச்சினையில்... உதாரணமாக காவிரி பிரச்சினையில் சரியான நிலைப்பாடு எடுத்தால் இதே முற்போக்குவாதிகள் இதே தலைவர்களை ஆதரிக்கின்றனர். அப்போது அனைத்தும் மறக்கப்பட்டு விடுகின்றன.  இப்படிப்பட்ட அணுகுமுறை சமூக மாற்றத்தை தோற்றுவிக்காது.

“பாஜகவும் சங் பரிவாரங்களும் சமூகத்தைப் பிளவுபடுத்தி, மக்களை சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்தாள முயற்சிக்கின்றன. நாம் மதச்சார்பற்ற முற்போக்கு சமூகத்தில் வாழவில்லை. இதைத்தான் மதவாதக் குழுக்கள் மக்களைப் பிளவுபடுத்த கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமூகத்தில் மேலும் பிரச்சினைகளை உருவாக்குவார்கள்''.

இவ்வாறு கூறியுள்ளார் பா.ரஞ்சித்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x