Published : 05 Apr 2019 03:42 PM
Last Updated : 05 Apr 2019 03:42 PM

இந்து முன்னணியினர் தாக்க முயற்சி; கி.வீரமணிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: திருமாவளவன்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைத் தாக்க இந்து முன்னணியினர் முயற்சி செய்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வாகனம் மீது சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்து முன்னணியினர் சிலர் உள்ளே நுழைந்து, மேடையை நோக்கி காலணிகளை வீசியும், திராவிடர் கழகத்தினர் மீது கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டதில் இருவரின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கி.வீரமணி, சனாதனவாதிகளை ஆட்சியமைக்க மீண்டும் அனுமதித்தால் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்காது என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வன்முறையைத் தூண்டி விடும் முயற்சியில் மதவெறி சக்திகள் இறங்கியுள்ளன. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கி.வீரமணிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோரைக் கைது செய்ய வேண்டும்" என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x