Published : 26 Apr 2019 02:46 PM
Last Updated : 26 Apr 2019 02:46 PM

போலீஸ் துணையுடன் கெயில் திட்டப் பணிகள்: மக்கள் விரோத ஆட்சியாளர்கள் திருந்தவே மாட்டார்களா? - தினகரன் கண்டனம்

டெல்டாவில் போலீஸ் துணையுடன் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதிகளில் ஒன்றான நாகை மாவட்டம் நாங்கூர் பகுதியில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி காவல்துறை பாதுகாப்புடன் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீர்காழி வட்டத்திலுள்ள பழையபாளையத்தில் இருந்து செம்பனார் கோயில் அருகிலுள்ள மேமாத்தூர் வரை 29 கி.மீ. தூரத்திற்கு விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு அப்பகுதி மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்தினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அவர்களுடைய குமுறல்களைக் காது கொடுத்து கேட்கும் நிலையில் எதேச்சதிகார மத்திய அரசும், பழனிசாமி அரசும் இல்லை.

விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் பாதிக்கும் என்ற காரணத்தால் தான் ஜெயலலிதா கெயில் திட்டத்திற்காக விவசாய நிலங்களில் குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்தார்கள். ஆனால் மூச்சுக்கு முந்நூறு முறை 'இது ஜெயலலிதா ஆட்சி' என்று சொல்லி ஏமாற்றும் இவர்கள், ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களைத் தொடர்ந்து அதிகாரிகளையும், காவல் துறையினரையும் குவித்துச் செயல்படுத்துகிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக அப்பணிகளை நிறுத்த வேண்டும்.

மக்களுக்காக தான் திட்டங்களே தவிர, கார்ப்பரேட்டுகளின் திட்டங்களுக்காக மக்கள் இல்லை. அதுவும் விவசாய மண்ணில், விவசாயத்தை அழித்து எந்த திட்டமும் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் இவர்களின் ஆட்டத்திற்கு விரைவில் முடிவு காலம் வரப்போகிறது. அதிலும் குறிப்பாக கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக காலங்காலமாக நமக்குச் சோறு போடும் காவிரி டெல்டாவைக் காவு கொடுப்பதற்கு ஒற்றைக்காலில் நிற்கும் இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதிகாரமும் அதனால் கிடைக்கிற போலீஸ் பாதுகாப்பும் எப்போதும் நிலைத்திருக்காது என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.

டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதற்கு எதிர்மாறாக  காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கத் துடிக்கும் முயற்சிகளைக் கைவிட்டுஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்களால் நிச்சயம் திருத்தப்படுவார்கள்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x