

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அழகர் சாமி களமிறக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. விருதுநகர் வேட்பாளர் அழகர்சாமி பிரச்சாரம் செல்லும் இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி சொல்ல மறந்துவிடுகிறாராம்.
அவருக்கு சொந்த ஊர் மதுரை. பக்கத்து ஊரில் சீட் வாங்கியிருந்தாலும் உள்ளூர் பரிச்சியம் இல்லாததால் மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை.
அதுமட்டுமல்லாமல் விருதுநகர் அதிமுக நிர்வாகிகள் எல்லோரும் சாத்தூர் இடைத்தேர்தலில்தான் கவனம் செலுத்துகின்றனர். இந்தக் காரணத்தால் தேமுதிக வேட்பாளருக்காக களப்பணி செய்வதில்லை.
அந்தத் தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூரை களமிறக்கியுள்ளது. அவர் உள்ளூர்க்காரர், ஏற்கெனவே தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர் என்ற காரணத்தால் மக்கள் அவர் மீது ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேவேளையில் தற்போதைய எம்.பி.யான டி.ராதாகிருஷ்ணன் தொகுதிப் பக்கமே தலைவைத்துப் படுக்காதவர் என்ற விமர்சனத்தால் மக்கள் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருக்கிறார். அதனாலேயே விருதுநகர் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினை, அதிமுக எம்.பி.,யின் பாராமுகம் ஆகியன இப்போதைய தேமுதிக வேட்பாளர் மீது பாய்கிறது.
இப்படி பல்வேறு கள நெருக்கடிகளால் அச்சத்திலேயே இருக்கும் தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி கூட்டணிக் கட்சிகளை நினைவு கொள்வது எங்கே என்கின்றனர் கட்சிக்காரர்கள்.
ஆனால், அழகர்சாமி ஓட்டு சேகரிக்க செல்லும்போது அதிமுகவினர் வராவிட்டாலும்கூட பாஜகவினர் விட்டுக் கொடுக்காமல் வந்துவிடுகின்றனராம். அப்படி இருந்தும், பிரச்சாரத்தை முடிக்கும் போது பாஜகவுக்கு நன்றி சொல்ல அழகர்சாமி வழக்கமாகவே மறந்துவிடுகிறார். ஒவ்வொரு முறையும் பாஜகவினர் 'பாரத் மாதா கி ஜே' என்று சொல்லி நினைவுபடுத்த உடனே அழகர் சாமி எங்கள் கூட்டணியில் இருக்கும் பாஜகவினருக்கு நன்றி எனச் சொல்கிறார்.