

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்குள் பெண் வட்டாட்சியர் ஒருவர் அனுமதியில்லாமல் நுழைந்த விவகாரத்தில் மேலும் 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மதுரை மேற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு ஆவணங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக பேரவை தொகுதி வாரியாக பிரித்து மதுரை மருத்துவக் கல்லூரி பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மதுரை மேற்கு பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஏப். 20-ல் பெண் வட்டாட்சியர் சம்பூரணம் அனுமதியில்லாமல் 3 ஊழியர்களுடன் சென்று அங்கிருந்த வாக்குப்பதிவு ஆவணங்களை வெளியே கொண்டுச் சென்று நகல் எடுத்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் எதிர்க்கட்சியினர் மதுரை மருத்துவக் கல்லூரி முன்பு தர்ணா நடத்தினர். பின்னர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சம்பூரணம் மற்றும் 3 ஊழியர்கள் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் அனுமதியில்லாமல் நுழைந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பூரணம் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணையத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், வட்டாட்சியர் சம்பூரணத்துடன் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் சென்ற ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி ஊழியர் ராஜபிரகாஷ், துப்பபுரவு பணியாளர் சூரியபிரகாஷ் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ் இந்த சம்பவம் தொடர்பாக சம்பூரணம் உள்ளிட்ட 4 பேரிடம் மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நடராஜன் விசாரணை நடத்தினார்.
அப்போது, மதுரை மேற்கு பேரவை தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், கலால் உதவி ஆணையருமான குருசந்திரன் சொன்னதன் பேரிலேயே வாக்குப்பதிவு ஆவண அறைக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, குருசந்திரனிடம் விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் ஆவணங்களை நகல் எடுக்க வட்டாட்சியர் உள்ளிட்ட 4 பேரையும் வாக்குப்பதிவு ஆவண அறைக்கு அனுப்பியது ஏன்? எதற்காக ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டது? என்னென்ன ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டது? என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குருசந்திரனை ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.