தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியது எப்படி? - தீவிர விசாரணை நடத்தும் அதிமுக
பெரிய அளவில் ஓட்டு வங்கி இல்லாத தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியது அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்பார்த்ததை விட பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்தது, அதிமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக, தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் போட்டியில் இருந்து ஒதுங்கியபோதும், வாக்கு வங்கியே இல்லாத பாஜக தங்களை எதிர்த்து போட்டியிட்டது அதிமுக தரப்பில் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஒரு இடத்தில் கூட பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்கக் கூடாது என்று அதிமுக பொறுப்பாளர்களுக்கு கட்சித் தலைமை உத்தர விட்டிருந்தது.
கோவை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய இடங்களில் பாஜகவுக்கு கணிசமான ஓட்டு வங்கி இருக் கிறது. அதனால், அங்கு பாஜகவை தோற்கடித்தாலும் டெபாசிட் இழக்க வைக்க முடியாது என்று தேர்தலுக்கு முன்பே உளவுத்துறையினர் அறிக்கை அனுப்பியிருந்தனர். ஆனால் தூத்துக் குடி, கடலூர், விருத்தாசலம் ஆகிய இடங்களில் பாஜக டெபாசிட்கூட வாங்காது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடியில் பாஜக 21 சதவீதம் ஓட்டுகளைப் பெற்று டெபாசிட் வாங்கியது அதிமுகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அங்கு மதரீதியான ஓட்டுகள் கிடையாது. சாதி ரீதியான ஓட்டுக்கள் மட்டுமே கட்சிகளுக்கு கிடைக்கின்றன. இதனால், தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியதற்கு காரணம் என்ன என்று விசாரணை நடத்த அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: நெல்லை பாஜக வேட்பாளரை வளைத்தது மற்றும் அவரை அதிமுகவில் சேர்த்தது இவையே தூத்துக்குடியில் பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்கக் காரணம். ஏனெனில், நெல்லையில் அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை அதிமுக பக்கம் கொண்டு சென்றது மற்றொரு சமூகத்தினர்.
ஏற்கெனவே, குறிப்பிட்ட சமுதாயத்துக்கு அதிகமான பிரதிநிதித்துவம் அளித்துவிட்டு, தங்களை புறக்கணிப்பதாக நாடார் சமூகத்தினர் அதிமுக மீது அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், நெல்லை வேட் பாளரை வாபஸ் பெற வைத்து, கட்சியில் சேர்த்த சம்பவம் அவர் களின் கோபத்தை அதிகரித்தது. அதேசமயம், தூத்துக்குடி பாஜக வேட்பாளர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால், பெரும் பாலான நாடார் ஓட்டுகள் பாஜக பக்கம் சென்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
