தமிழக மக்கள் ஜனநாயகத்தை நிச்சயமாக பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது: வாக்களித்த பின் ஸ்டாலின் பேட்டி

தமிழக மக்கள் ஜனநாயகத்தை நிச்சயமாக பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது: வாக்களித்த பின் ஸ்டாலின் பேட்டி
Updated on
1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "தென்சென்னை தொகுதியில் எனது வாக்கினைப் பதிவு செய்துள்ளேன். ஒட்டுமொத்த வாக்காளர்களும் தங்களது வாக்கினைப் பதிவு செய்து, ஜனநாயகத்தின் அடிப்படையில், ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்கு உங்கள் வாக்கு நிச்சயமாக அமைந்திட வேண்டும் என்பதை, திமுக தலைவர் என்ற முறையில் வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

எனவே, ஒவ்வொருவரும் தவறாமல் தங்கள் வாக்கினைப் பதிவு செய்ய என்னுடைய பனிவான வேண்டுகோளை, வாக்காளர்களாக இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும், நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த தேர்தல், முன்பு நடைபெற்ற தேர்தல்களை விட முக்கியமான தேர்தலாக அமையப் போகிறது. வாக்குகளுக்காக 500 முதல் 10,000 ரூபாயைத் தாண்டியும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க திட்டமிட்டிருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த நோட்டுகளுக்கு அடிபணியாமல், தமிழக மக்கள் ஜனநாயகத்தை நிச்சயமாக பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இந்த தேர்தல் அமையப் போகிறது"என தெரிவித்தார்.

இதையடுத்து, சில வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பழுது என செய்திகள் வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், "தேர்தல் ஆணையம் தான் அதனைக் கவனிக்க வேண்டும். நாங்கள் புகார் தான் அளிக்க முடியும். முகவர்கள், புகார் அளிக்கிறார்கள். அதனை சரிசெய்ய வேண்டிது ஆணையத்தின் கடமை. தேர்தல் ஆணையம், மத்திய, மாநில அரசுகளுடன் கூட்டணியாக அமைந்துள்ளது நாடறிந்த உண்மை. பழுதான இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட வேண்டும்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in