

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதி யாக நடந்து முடிந்தது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 70.90 சதவீத வாக்குகளும், 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் 71.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 2-வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் உள்ள 95 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட் டுள்ளது. அதனால், புதுச்சேரி உட்பட 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி உட்பட 19 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடந்தது. சித்திரைத் திருவிழா நடப்பதால் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக் களித்தனர். 18 வயது முழுமையடைந்த முதல்முறை வாக்காளர்கள், பெண்கள், முதியோர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத் துடனும் வாக்களித்தனர். பல வாக்குச் சாவடிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் காத் திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். வாக்காளர்களின் வசதிக் காக வாக்குச்சாவடிகளில் நிழற்பந்தல் கள் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்பட்டது. காலை 11 மணி வரை 30.62%, பகல் 1 மணி வரை 39.49%, பிற்பகல் 3 மணி வரை 52.02%, மாலை 5 மணி வரை 63.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பகல் 1 மணி வரை 42.92%, பிற்பகல் 3 மணி வரை 55.97%, மாலை 5 மணி வரை 67.08%, மாலை 6 மணி வரை 71.62 சதவீதமும் வாக்குகள் பதிவானது.
இரவு 9 மணிக்கு செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:
இரவு 9 மணி நிலவரப்படி 38 மக்களவை தொகுதிகளில் 70.90 சதவீதமும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 71.62 சதவீதமும் வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 79.75 சதவீதம், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 57.43% வாக்குகள் பதிவாகியுள்ளன. சிதம்பரத்தில் 78.43%, கள்ளக்குறிச்சி யில் 76.36%, கரூரில் 78.96%, ஆரணியில் 76.44%, நாகையில் 77.28%, வடசென்னை யில் 61.76%, மத்திய சென்னையில் 57.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இடைத்தேர்தல்
18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக அரூரில் 86.96 சதவீதம், குறைந்தபட்சமாக சாத்தூரில் 60.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை பெரம்பூரில் 61.06 சதவீத வாக்குகள் பதிவானது. அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட கீழ்விஷாரத்தில் கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தவிர மாநிலத்தில் வேறு எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தது. 1 சதவீதத்துக்கும் குறைவான அளவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டது. வாக்குப் பதிவு பற்றிய துல்லியமான விவரங்கள் நாளை (இன்று) தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இயந்திரங்கள் பழுது
தமிழகம் முழுவதும் 818 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1493 விவிபாட் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் பழுதானதால் 1 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு தாமதமானது. பழுதடைந்த இயந்திரங்களுக்கு பதிலாக புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஒருசில வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப் பதிவை அழிக்காமல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அந்த வாக்குச்சாவடிகளில் சில மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தால் வாக்களிக்க முடியாமல் பலர் வேதனையுடன் திரும்பினர். மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக் கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல் லாததால் வட இந்தியர்கள் நூற்றுக்கணக் கானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுபோன்ற நிலை தமிழகத்தின் பல இடங்களில் காணப்பட்டது. பூத் சிலிப் இல்லாமல் வந்தவர்கள் வாக்களிக்க சிரமப் பட்டனர். கை விரலில் வைக்கப்பட்ட மை உடனடியாக அழிவதாக ஒருசில இடங் களில் வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர்.
தேர்தலையொட்டி வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தன. தமிழக போலீ ஸாருடன் துணை ராணுவப் படையின ரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும்,விவிபாட் இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதி வாக்கு எண்ணும் மையங் களுக்குபலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங் கள் வைக்கப்படும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது