Published : 28 Apr 2019 09:57 AM
Last Updated : 28 Apr 2019 09:57 AM

நாடாளுமன்றத்தில் விரைவில் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும்: வைகோவை சந்தித்தபின் வைரமுத்து பேட்டி

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, நேற்று மாலை 6 மணி அளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்  சந்தித்து, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார்.

 

வைகோவைச் சந்தித்து  விட்டு வந்து செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:-

 

“திராவிட இயக்கத்தின் சிங்க முகத்தைப் பார்க்க வந்தேன்; போர்வாளை வாழ்த்த வந்தேன்.

 

அண்மைக் காலமாக நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தாய்க் கழகத்தோடு, கலைஞர் வளர்த்த பேரியக்கத்தோடு, தளபதியோடு புரட்சிப் புயல் வைகோ அவர்கள் தோழமையாக, நட்பாக, அன்பாக, குடும்பமாக இணைந்து கொள்கைக் கூட்டணியை வளர்த்தெடுக்கிறார் என்பது எங்களைப் போன்ற தமிழ் இன உணர்வாளர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது.

 

வைகோவினுடைய உழைப்பின் மீது எனக்குத் தாளமுடியாத வியப்பு!

 

‘இது உடம்பா? இரும்பா? இல்லை உடும்பா?’ என்றெல்லாம் எனக்கு ஆச்சரியம் வரும்.

 

எங்கே பார்த்தாலும் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறார்; எந்த இடத்திலும் பேசிக்கொண்டு இருக்கிறார்.

 

காற்றைப் போல, வீசிக்கொண்டே இருக்கிறார்;

அலையைப் போல பாய்ந்துகொண்டே இருக்கிறார்;

சூரியனைப் போல உதித்துக்கொண்டே இருக்கிறார்.

 

அவருடைய உழைப்பு தமிழ்ச் சமுதாயத்தை மீட்டெடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

வெகு விரைவில் நாடாளுமன்றத்தில் எங்கள் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்ற நம்பிக்கை எங்களைப் போன்றவர்களுக்கு இருக்கிறது. அது ஒலிக்கும். அது ஒலித்தால் தமிழ் இனமும், தமிழ் மொழியும் எங்கெங்கு தொய்வு காண்கிறதோ அங்கெல்லாம் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

 

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நாகரிகமான, நளினமான பேச்சு; கொள்கை மாறாத பேச்சு; கோட்பாட்டைத் தெளிவுபடுத்துகிற பேச்சு; மக்களின் மனதோடு பேசுகிற பேச்சு ஒன்று உண்டு என்றால், அது வைகோ அவர்களின் பேச்சு என்று நாங்கள் கருதுகிறோம்.

 

மிகச் சில நல்ல பேச்சாளர்களின் பேச்சுக்களுள் தேர்தல் பிரச்சாரப் பேச்சுகளுள் வைகோவின் பேச்சும் தலைசிறந்தது என்று பொதுமக்களும், இணையதள சமூக ஊடக நண்பர்களும் நம்புகிறார்கள்.

 

அவர் பல்லாண்டு வாழ வேண்டும். அவர் உடல் நலம் ஓங்கிச் சிறந்து விளங்க வேண்டும். ஏனென்றால், வைகோவின் உடலுக்குள் இருப்பது ஓர் உயிர் அல்ல, தமிழ் இனத்தின் பேருயிரும் அந்த ஓர் உயிருக்குள் அடங்கி இருக்கிறது என்பதனால் அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்த வந்தேன்.

 

இந்தத் தேர்தல் ஒரு பெரிய வெற்றியை, திருப்புமுனையை உண்மையான திராவிட இயக்கத்துக்கு வழங்கும் என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். வெற்றி தொடரட்டும். தமிழினம் மீளட்டும்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x