Published : 14 Apr 2019 12:00 AM
Last Updated : 14 Apr 2019 12:00 AM

அய்யூர் காப்புக்காட்டில் கோடையிலும் வற்றாத சாமி ஏரி: குடிநீருக்காக நாடி வரும் வனவிலங்குகள்

தேன்கனிக்கோட்டை வனச்சரகத் தில் உள்ள காப்புக்காடுகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் காரணமாக நீர் நிலைகள் வேகமாக வற்றி வருகின்றன. இந்நிலையில், கோடையிலும் வற்றாத நீர்நிலையாக விளங்கும் அய்யூர் சாமி ஏரிக்கு தாகம் தணிக்க வனவிலங்குகள் நாடி வர தொடங்கியுள்ளன.

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் கடந்த ஆண்டு பருவமழை குறைவு காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் இந்த அடர்ந்த வனத்தில் உள்ள யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் தண்ணீர் தேடி அலையும் நிலை உருவாகி உள்ளது.

இதற்கு விதிவிலக்காக அய்யூர் காப்புக்காட்டில் உள்ள சாமி ஏரியில் இந்த கடுமையான கோடை வெயிலிலும் தண்ணீர் வற்றாமல் உள்ளது. சுற்றிலும் மலைகளை அரணாக கொண்டு நடுவில் அமைந்துள்ள சாமி ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் இருப்பதால், இந்த நீர்நிலையை அறிந்த யானைகள் உட்பட வனவிலங்குகள் வெகு தொலைவில் இருந்தும் கூட நம்பிக்கையுடன் சாமி ஏரியை நாடி வந்து தாகம் தணித்துச் செல்கின்றன. வனத்தில் இயற்கையாக அமைந்த இந்த சாமி ஏரி வனவிலங்குகளின் தாகம் தணிக்கும் வற்றாத நீர்நிலையாக திகழ்கிறது.

இதுகுறித்து தேன்கனிக் கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது: வனத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் வனத்துறை சார்பில் அமைக்கப் பட்டுள்ள 11 தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அய்யூர் காப்புக்காட்டில் இயற்கையாக அமைந்த நீர்நிலையான சாமி ஏரியில் மட்டும் இந்த கடுமையான கோடையிலும் தண்ணீர் வற்றாமல் உள்ளதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நாடி வரும் முக்கிய நீர்நிலையாக சாமி ஏரி உள்ளது. நேற்று முன்தினம் கூட மாலை 5 மணியளவில் 9 யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து விட்டுச்சென்றன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x