Published : 08 Sep 2014 11:35 AM
Last Updated : 08 Sep 2014 11:35 AM

நந்தன் கால்வாயில் நீர்வரத்துக்கு புதிய வழித்தடத்தில் திட்டம் தேவை: 128 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மலையில் இருந்து உற்பத்தியாகும் துரிஞ்சலாற்றை நம்பி உருவானது ‘நந்தன் கால்வாய்’. கீழ்பென்னாத்தூர் அருகே பள்ளிகொண்டாப்பட்டு என்ற கிராமம் வழியாக செல்லும் துரிஞ்சலாற்றின் குறுக்கே பழமையான அணைக்கட்டு இருந்தது. அங்குதான், நந்தன் கால்வாய் தொடங்குகிறது. 37 கி.மீ. தொலைவுக்கு செல்லும் கால்வாய், 24 ஏரிகளுக்கு பாசன வசதி கொடுத்தது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி பனமலை கிராமத்தில் உள்ள உறிசா ஏரியை நந்தன் கால்வாய் சென்றடைகிறது. அங்கிருந்து 11 ஏரிகளுக்கு நீர் கொடுத்து உதவியது. இதன்மூலமாக சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. பல நூறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வழி வகுத்து கொடுத்தது.

128 ஆண்டுகள் கடந்தும்

பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் இருந்த அணைக்கட்டு, 1886-ல் உடைந்தது. அதனை சீரமைத்துக் கொடுக்க, விவசாயி கள் கோரிக்கை வைத்தனர். காலங்கள் மாறியது... சாம்ராஜ்யம் மாறியது... ஆட்சிகள் மாறியது... தலைமுறையும் மாறியது... ஆனால், காட்சிகள் மட்டும் மாறவில்லை. 128 ஆண்டுகள் கடந்தும், நந்தன் கால்வாயில் தண்ணீர் ஓடவில்லை. பாசன கால்வாய் தூர்ந்துபோய்விட்டது.

லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கிய சீரமைப்பு பணிகள், கோடி ரூபாய் மதிப்பில் உயர்ந்தபோதும், ஒரு சொட்டு தண்ணீர்கூட கால்வாயில் ஓடவில்லை. இந்த நிலையில், பள்ளிக்கொண்டாப்பட்டு எல்லையில் சிறியளவில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது. அதற்கு, கீரனூர் அணைக்கட்டு என்று பெயரிடப்பட்டது. பழைய அணைக்கட்டு மண்ணோடு மண்ணாக மறைந்துவிட்டது.

புதிய அணைக்கட்டில் இருந்து கொளத்தூர் கிராமம் வரை 12.40 கி.மீ. தொலைவுக்கு உலக வங்கி நிதியுதவியுடன் நீர்வள நிலவளத் திட்டம் மூலமாக ரூ.4.30 கோடி மதிப்பில் கால்வாய் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது.

புதிய வழித்தடம்

அப்பணிகள் குறித்து விவசாயிகள் கூறும்போது, “கவுத்தி மலையில் தொடங்கும் துரிஞ்சலாற்றில் இருந்து வரும் கால்வாய் சீரமைக்கவில்லை. ஆனால், அணைக்கட்டில் இருந்து சீரமைத்துள்ளனர். அதையும் சரியாக செய்யவில்லை. மழையில் சில இடங்களில் கால்வாய் இரு புறங்களிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் கால்வாய், ஆழப்படுத்தப்படவில்லை. கவுத்தி மலையில் இருந்து தண்ணீர் வழிந்து, துரிஞ்சலாற்றில் ஓடுவது சந்தேகம்.

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்று நீர், தி.மலை அருகே உள்ள சமுத்திரம் ஏரிக்கு வருகிறது. அங்கிருந்து, கீரனூர் அணைக்கட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கான பாசன கால்வாய் வசதியும் உள்ளது. அதில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் மற்றும் தூர்ந்து கிடப்பதை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், துரிஞ்சலாறு மற்றும் தென்பெண்ணையாற்று நீர் மூலமாக, நந்தன் கால்வாயில் தண்ணீர் ஓடும். விவசாயம் செழிக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x