

சிவகங்கையில் வெற்றி உறுதி என்று அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று (ஏப்ரல் 18) முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா போட்டியிடுகிறார்.
இவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டுயிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகங்கையில் தன் வெற்றி உறுதி என்று தெரிவித்துள்ளார் எச்.ராஜா.
இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில், ''சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும், கடுமையாகப் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், பாஜக தொண்டர்களுக்கும், தேசிய உணர்வாளர்களுக்கும், மனமார்ந்த கோடானு கோடி நன்றிகள்.
சிவகங்கையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கும் ஊழல் பணநாயகத்திற்குமான போட்டியில் வெற்றி உறுதி'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவைத் தேர்தலுக்கான அடுத்தகட்டப் பிரச்சாரத்துக்காக இன்று (ஏப்ரல் 19) கேரளாவின் பாலக்காட்டுக்குப் பயணப்பட இருப்பதாகவும் எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.