

உணர்ச்சியுள்ள தமிழர்களின் 'கருப்பு தினம்' உருவாக்கியுள்ள உணர்வையும், எழுச்சியையும் தமிழர்கள் உள்ள வரையில் மறக்க மாட்டார்கள் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று ஐ.நா.சபைகூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 25-ந்தேதி அன்று அவரவர் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைப்பதோடு கருப்புச்சட்டை அணிதல், கறுப்பு சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் கடும் கண்டனத்தை எதிரொலித்திடுவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி, ஐ.நா. பொதுக்கூட்டத்தில் ராஜபக்ச கலந்து கொள்ளும் இன்றைய தினத்தை (செப்டம்பர் 25) திமுகவினர் கருப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். இதனையொட்டி, கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணா நிதியின் வீட்டு வாசலில் இருபுறமும் கறுப்புகொடி ஏற்றப்பட்டிருந்தது. கருணாநிதியும் கறுப்பு சட்டை அணிந்து அறிவாலயம் சென்றார்.
அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி: "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், “டெசோ" சார்பிலும் அறிவிக்கப்பட்டு, இன்று நடத்தப்படுகின்ற இந்த கருப்பு நாளை தமிழகத்திலே மாத்திரமல்ல; உணர்ச்சியுள்ள தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் - எங்கள் அறிவிப்புக்கு இணங்க கறுப்பு தினமாக கடைப்பிடிக்கிறார்கள்.
நாங்கள் எங்கள் வேண்டுகோளை இப்போது உள்ள மத்திய அரசு மாத்திரமல்ல; ஏற்கனவே நடைபெற்ற மத்திய அரசும் உணருகின்ற வகையில், எங்களுடைய எதிர்ப்பையும் மறுப்பையும் தெரிவித்திருக்கிறோம்.
அதை இன்று உள்ள மத்திய, மாநில அரசுகள் செவி மடுக்க மறுத்தாலும் கூட, இந்தக் கருப்பு தினம் உருவாக்கியுள்ள உணர்வையும், எழுச்சியையும் தமிழர்கள் உள்ள வரையில் மறக்க மாட்டார்கள்" என்றார்.
திமுகவினர் வீடுகளில் கருப்புக்கொடி:
ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும் கறுப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அவரும் கறுப்பு சட்டை அணிந்திருந்தார். பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், திமுக எம்.பி. கனிமொழி எம்.பி. வீடு உள்பட அனைத்து தி.மு.க. பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.