Published : 16 Apr 2019 09:13 PM
Last Updated : 16 Apr 2019 09:13 PM

கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

தூத்துக்குடி, குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி தொகுதியில் திமுக கூட்டணியில் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் பாஜக தலைவர் தமிழிசையும் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். இருவருக்கும் இடையே நடக்கும் போட்டியில் கனிமொழி தரப்பில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தொகுதியில் வரும் தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில் கடந்த மாதம் மற்றும் ஏப்ரல் 1-ம் தேதி நடந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்து இன்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆணையம் அறிவிப்புக்கு திமுக தரப்பில் கண்டனம் வெளியாகிய நிலையில் அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் தூத்துக்குடி இல்லம் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தத் தொடங்கியுள்ளனர்.

கனிமொழி இன்று தேர்தல் பிரச்சாரம் முடித்து இல்லம் திரும்பிய நிலையில் 6 மணிக்கு மேல் அவர் தங்கியுள்ள குறிஞ்சி நகர் வீடு, அலுவலகத்துக்கு திடீரென வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வீடு அலுவலகத்திற்குள் அவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு முன்னர் எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தில் கனிமொழிக்கு ஒரு பெண் ஆரத்தி எடுத்ததற்கு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் மீது கொடுத்த புகாரில் உடனடியாக தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது ரெய்டு விவகாரத்திலும் இதுபோன்று பாரபட்சம் காட்டப்படுவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபோன்ற ரெய்டு அடக்குமுறைகள் காரணமாக திமுகவுக்கு மக்கள் மனதில் ஒரு இரக்கம் பிறக்க தேர்தல் ஆணையம் உதவுவதாக திமுக தரப்பு வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x