Published : 13 Apr 2019 02:05 PM
Last Updated : 13 Apr 2019 02:05 PM

‘நீட் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் கேளுங்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது’ என்று?- கமல்ஹாசன் பிரச்சாரத்துக்கு அனிதாவின் அண்ணன் பதில்

யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று உயிரிழந்த மாணவி அனிதாவின் பெற்றோரிடம் கேளுங்கள் என கமல்ஹாசன் பிரச்சாரம் செய்திருந்தார். இதற்கு அனிதாவின் அண்ணன் கமல்ஹாசனுக்கு முகநூலில் பதிலளித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை மத்திய அரசு திடீரென அறிமுகப்படுத்தியது. ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வை நுழையவிடவில்லை. அவரது தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விடமாட்டோம் என ஆணித்தரமாக இருந்தது.

ஆனால், அவரது மரணத்திற்குப் பின் அமைந்த அதிமுக ஆட்சி அவரது அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராகச் செயல்பட்டது. இதனால் நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அமல்படுத்தப்பட்டன. நீட் தேர்வு அமலானதால் மாநில வழியில் கல்வி பயின்ற லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறாமல்போனது.

ஏழை, நடுத்தரப் பெற்றோர் நீட் பயிற்சிக்காக லட்சக்கணக்கில் பயிற்சி மையங்களில் பணம் செலவழிக்கும் நிலை உருவானது. 98 சதவீதம் மதிப்பெண் பெற்ற அனிதா தேர்ச்சி அடைய முடியாததால் தோல்வியைத் தழுவினார். உச்ச நீதிமன்றம் வரை நீதி கேட்டுச் சென்றும் நீதி கிடைக்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

அவரது மரணம் மிகப்பெரிய அதிர்வலையைத் தமிழகத்தில் ஏற்படுத்தியது. நீட் நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு வேண்டாம் என்று மறுக்கவில்லை, தமிழ் மொழியில்தான் வேண்டும் என்றது என நேற்று பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்கள் விரும்பாவிட்டால் நீட் இல்லை என அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் சார்பில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஆவேச வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கையில் டார்ச் லைட்டுடன் டிவி பார்ப்பார் கமல். டிவியில் ஸ்டாலின் பேசுவார், மோடி பேசுவார், இன்னும் பலரின் தேர்தல் பரப்புரை இருக்கும். இதனால் கோபத்துடன் டார்ச் லைட்டைத் தூக்கி எறிந்து டிவியை உடைத்துவிட்டு மக்களைப் பார்த்து கமல் சொல்வார்.

யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என வரிசையாக பேசிவிட்டு இவர்களுக்கா? என்பார், நீ என்னய்யா சொல்வது நாங்கள் பெற்றோர் சொல்வதைக்கேட்டு வாக்களிப்போம் என்று சொல்கிறீர்களா? எனக்கேட்கும் கமல் அதுவும் சரிதான் பெற்றோரைக்கேட்டு வாக்களியுங்கள் எந்த பெற்றோரைத்தெரியுமா?

நீட் தேர்வால் தேர்ச்சியடைய முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்டாரே அனிதா, அவரது பெற்றோரைக் கேளுங்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று சொல்வார்கள் என முடித்திருப்பார்.

இதற்கு நீட் தேர்வால் மரணத்தை தழுவிய அனிதாவின் அண்ணன் மணிரத்தினம்  தனது முக நூலில் பதிலளித்துள்ளார். அதற்கு ஆதரவு பெருகி வருகிறது. வைரலாகி வருகிறது.

அனிதாவின் அண்ணன் மணிரத்தினத்தின் முகநூல் பதிவு:

“அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான்...

நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..

ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்..

புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமலுக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்...

அண்ணன் #கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் #நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்..

 #பாசிச_பாஜக கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது, என்பதில்...

அனிதா இறந்த போது "திருமாவளவன்" இதை சும்மா விடக்கூடாது தாங்கள் கூறிய அதே #திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர்..

மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி திமுக மட்டுமே.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

ஆதலால் எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்  #தலைவர்_திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே என்றும் #கமல்_ரசிகன்''.

இவ்வாறு மணிரத்தினம் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ப.சிதம்பரம் நீட் வேண்டுமா? வேண்டாமா? யாருக்கு வாக்களிக்கவேண்டும் முடிவு செய்யுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கும் மணிரத்தினம் பதிலளித்துள்ளார்.

அவரது பதிவு:

“நீட் தேர்வு குறித்த அரசியல் கட்சிகளின் முடிவு தெளிவாக தெரிந்து விட்டதால்,பெற்றோரும் மாணவரும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவு பெற்றுவிட்டனர்..
-ப.சிதம்பரம்

அப்படியே உங்க மனைவி #நளினி_சிதம்பரத்திற்குதெளிவுபடுத்தி விடுங்க அய்யா...நீட் வேணும்னு கோர்ட்டுக்கு கட்டு தூக்கிட்டு போய்டப் போறாங்க. நீட் தேர்வைப் பத்தி மட்டும் நீங்க பேசாதீங்க சிதம்பரம்..” என மணிரத்தினம் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x