காவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி

காவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி
Updated on
1 min read

தமிழகத்தில் காவலர் குடியிருப்புகளுக்கென பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் வெளிப்படியாக ஒதுக்கீடு நடக்கவேண்ட்ம், சட்டவிரோதமாக வசிப்பவர்களை 60 நாட்களில் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் ரகுபதி, இவர் தனக்கு சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் காவலர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடப்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களும் குடியிருப்பில் வசித்து வருவதாகவும், ஒதுக்கீடு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரரின் குற்றச்சாட்டை டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்தார். உரிய விதிமுறைகளை பின்பற்றியே வீடுகள் ஒதுக்கப்படுவதாகவும், சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கீடு நடப்பதாகவும் வாதத்தில் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  விதிகளை மீறி வேண்டப்பட்டவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படுவதாக தெரிவித்து வீடுகள் ஒதுக்கீடு தொடர்பாக இரண்டு வாரங்களில் இணையதளம் ஒன்றை உருவாக்க வேண்டும். வீடு கேட்பவர்களிடம் ஆன் லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று, சீனியாரிட்டி அடிப்படையில் வீடு ஒதுக்கீடு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

காவலர்  குடியிருப்புகளில்  சட்டவிரோதமாக வசிப்பவர்களை அடையாளம் காணும் வகையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த அதிகாரிகள் குழு ஆய்வில் சட்டவிரோதமாக குடியிருப்போர் பற்றி தெரிய வந்தால், 60 நாட்களில் குடியிருப்பை காலி செய்ய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்டவர்கள் காலி செய்ய மறுத்தால் அவர்களை அப்புறப்படுத்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

 சட்டவிரோதமாக குடியிருப்புகளில் வசிப்போருக்கு எதிராக புகார்கள் வந்தால், அவற்றின் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும், விதிமீறலில் ஈடுபடுவோருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in