

வருமான வரித் துறையினர் தொடர்ந்த வழக்கில், முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ஆம் தேதி நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 1991– 92 மற்றும் 1992–93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். சென்னை எழும்பூரில் உள்ள, பொருளாதார குற்றங்களை விசாரிப்பதற்கான சென்னை கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்பு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்துள்ள கால அவகாசத்துக்குள் வழக்கை முடிக்கும் வகையில் உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு வருமான வரித் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதேவேளையில், இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதற்காக வருமான வரித் துறைக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கப்படாததால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதி கூறியிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் அக்டோபர் 1-ஆம் தேதி நேரில் ஆஜராக அவர் உத்தரவு பிறப்பித்தார்.