Published : 03 Apr 2019 10:55 AM
Last Updated : 03 Apr 2019 10:55 AM

ஆதார், பாஸ்போர்ட்ட புடிங்க.. தேர்தல் செலவுக்கு ரூ.50 லட்சம் லோன் கொடுங்க!- வங்கியை கிறுகிறுக்க வைக்கும் வேட்பாளர்

தேர்தல் செலவுக்காக ரூ.50 லட்சம் கடன் கேட்டு வேட்பாளர் ஒருவர் வங்கியில் கோரிக்கை மனு வழங்கியுள்ளார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அகிம்சா சோஷலிஸ்ட் என்ற கட்சி சார்பில் தி.ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.

முழங்கால் வரையிலான கதராடை, கையில் ஊன்றுகோலுடன் தனது சின்னமான ‘ஹாக்கி பேட்’, இடுப்பில் கடிகாரம் என காந்தி போன்ற தோற்றத்திலேயே தொகுதியில்  சுற்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நாமக்கல்லில் உள்ள வங்கிக்கு இதே கெட்டப்பில் சென்ற அவர், வங்கி அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

நான் காந்தியக் கொள்கைகளை தவறாமல் பின்பற்றுபவன். முழு நேர தொழிலாக விவசாயம் செய்வதோடு, யோகா ஆசிரியராகவும் இருக்கிறேன். நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

தேர்தலில் போட்டியிடுபவர் ரூ.70 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தலில் மக்களை சந்திப்பது, சுவரொட்டி, நோட்டீஸ் அச்சடிப்பது போன்ற செலவுகளுக்கு பணம் தேவைப் படுகிறது.தவிர, பிரச்சாரத்துக்காக ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் நான் செல்ல வேண்டும்.

இதற்கு ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. இதை கடனாக வழங்கினால், நான் வெற்றிபெற்று எம்.பி. ஆனதும், அந்த சம்பளத்தைக் கொண்டு, பைசா பாக்கி இல்லாமல் கடனை திருப்பி செலுத்திவிடுவேன்.

கடனை வாங்கிக்கொண்டு, வெளிநாட்டுக்கு தப்பிவிடுவேன் என்று பயப்பட வேண்டாம். என் பாஸ்போர்ட்டை வங்கியிடம் ஒப்படைக்கிறேன். வங்கி அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்லமாட்டேன்.

மத்திய அரசு எனக்கு வழங்கியுள்ள ஆதார் அட்டையை ஆதாரமாக வைத்துக்கொண்டு, தேர்தல் செலவுக்காக எனக்கு ரூ.50 லட்சம் கடன் வழங்கக் கோருகிறேன்.

இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.‘‘வீடு, கல்வி, தொழில், வாகனக் கடன் கேள்விப்பட்டிருக்கோம்.. தேர்தல் கடன் புதுசால்ல இருக்கு..’’ என்ற சிந்தனையில் இருக்கின்றனர் மனுவைப் பெற்றுக்கொண்ட வங்கி அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x