Published : 03 Apr 2019 02:43 PM
Last Updated : 03 Apr 2019 02:43 PM

திருச்சியில் சிக்கிய ரூ.2.10 கோடி பணம்: கார் கதவில் மறைத்து எடுத்து வந்த விசிக பிரமுகரிடம் விசாரணை

திருச்சியில் கார் கதவு உள்ளிட்ட பல்வேறு பாகங்களில் மறைத்து எடுத்துச் சென்ற ரூ.2.10 கோடி பணத்தைப் பறிமுதல் செய்த  தேர்தல் பறக்கும் படையினர் விசிக பிரமுகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் காரில் மறைத்து எடுத்துச் சென்ற ரூ.2.10 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதை ஒட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கடத்திச் செல்லப்படும் பணம், நகைகளை சோதனையிட்டுப் பிடிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் காவல் துறையினருடன் இணைந்து பறக்கும் படை மூலம் தமிழகம் முழுவதும் சோதனையிட்டு வருகின்றனர்.

இதுவரை நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணம் , நகைகள் பிடிபட்டுள்ளன. பறக்கும் படையினர் நடத்தும் வாகன சோதனையில் அரசியல் கட்சியினர் இதுவரை பிடிபட்டது அதிகமில்லை. இந்நிலையில் நேற்றிரவு திருச்சி அருகே நடத்தப்பட்ட சோதனையில் விசிக பிரமுகர் சிக்கினார்.

திருச்சியில் இருந்து பல கோடி ரொக்கப் பணம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தங்கதுரை தலைமையில் சொகுசுக் காரில் குன்னம் பகுதிக்கு கடத்திச் செல்வதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் பேரளி சுங்கச்சாவடி பகுதியில் ஏடிஎஸ்பி ரங்கராஜன், தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஸ்டீபன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சம்மந்தப்பட்ட காரை மறித்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர்.

காரில் சோதனையிட்டபோது எதுவும் இல்லை. சந்தேகமடைந்து காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்க கதவுகளைச் சோதித்தபோது கட்டுக்கட்டாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. தொடர்ந்து கதவுகளை திறந்து உள்ளே இருந்து ரூ.500 மற்றும் ரூ.2000 ரூபாய் நோட்டுக் கட்டுகளைப் பறிமுதல் செய்து அவற்றை எண்ணினர்.

அதில் மொத்தமாக ரூ.2.10 கோடி ரொக்கப் பணம் இருந்தது. கைப்பற்றப்பட்ட பணத்திற்கு தங்கதுரை தரப்பினரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து, பணம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசிக பிரமுகர் தங்கதுரை, அவருடன் வந்தவர்களிடம் வருமான வரித்துறையினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட பணம் சிதம்பரம் தொகுதிக்கு கொண்டுசெல்லக் கடத்தப்பட்டதா என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x