

மக்களவை பொதுத்தேர்தலை முன் னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத் தில் 8,293 பதற்றமான வாக்குச்சாவடி களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்க ளவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடக்கிறது. தமிழகத் தில் உள்ள 39 தொகுதிகள், புதுச் சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தின் தந்தையும் திமுக பொருளாளருமான துரைமுருகன் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் கைப் பற்றப்பட்டது. தொடர் நடவடிக்கை யாக திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனை யில் ரூ.11 கோடியே 53 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த அறிக்கைகளின் அடிப்படையில் வேலூர் மக்க ளவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்து ரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப் பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடக்கிறது.
இதையடுத்து, தமிழகத்தில் 38, புதுச்சேரியில் ஒரு தொகுதி என 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் 19 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக் கிறது. இதன்படி, தமிழகத்தில் மக்களவைக்கு 822 வேட்பாளர் களும் 18 சட்டப்பேரவை தொகுதி களில் 269 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தலை யொட்டி தமிழகத்தில் 22 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மையங்களில் 66,702 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்தத் தேர்தலில் 2 கோடியே 91 லட்சத்து 37,865 ஆண்கள், 2 கோடியே 99 லட்சத்து 93,924 பெண் கள், 5,719 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5 கோடியே 89 லட்சத்து 37,468 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில், 12 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல்முறை வாக்கா ளர்கள் ஆவர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி யைப் பொறுத்தவரை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் 970 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 5 லட்சத்து 13,798 பெண்கள், 4 லட்சத்து 59,516 ஆண்கள், 96 மூன்றாம் பாலினத்தவர் என மொத் தம் 9 லட்சத்து 73,410 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 31,905 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் ஏற்பாடுகள்
தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மாலையே அனைத்து வாக்குச்சாவடிகளுக் கும் மின்னணு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்கான தளவாட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், பாதுகாப்பு பணிக்காக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்ட 160 கம்பெனி அதாவது 14,500 துணை ராணுவப்படையினர், அந்தந்த பாகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், 20 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர், 17 ஆயிரம் ஊர்க் காவல் படையினர், 14 ஆயிரம் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள், 2,500 ஓய்வுபெற்ற காவலர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 8,293 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு, அங்கு கூடு தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் புதுச்சேரியில் 4,433 பேர் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் 1,850 காவலர்களும் அவர்க ளுக்கு உதவியாக 1,000 துணை ராணுவ படையினரும் வரவழைக் கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் நின் றால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனு மதிக்கப்படுவார்கள்.
மதுரைக்கு கூடுதல் நேரம்
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவுக்கு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அங்கு, 8 மணிக்கு மேல் வரிசையில் நிற்கும் வாக் காளர்களுக்கு டோக்கன் வழங்கப் பட்டு வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
இன்று வாக்குப்பதிவு நடப்பதை யொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் துணை ராணுவத்தினரும் போலீஸாரும் நேற்று அணிவகுப்பு நடத்தினர். வாக்குச்சாவடி பாதுகாப்பு மட்டு மின்றி, ரோந்துப் பணியிலும் போலீஸாருடன் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப் படுகின் றனர்.
95 தொகுதிகளில் வாக்குப் பதிவு
நாடு முழுவதும் 2-ம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அசாம், பிஹார், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்குவங்கம், மணிப்பூர் ஆகிய 11 மாநிலங்களுக்குட்பட்ட மொத்தம் 97 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தவிர திரிபுரா மாநிலத்தில் திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் 3-ம் கட்ட தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து 95 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
கர்நாடகாவில்…
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள் ளன. இதில் முதல் கட்டமாக 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மஜத, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் உட்பட 241 பேர் களத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில் 282 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 851 ஆய்வாளர்கள், 1188 துணை ஆய்வாளர்கள் உட்பட 90,997 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.