Published : 01 Apr 2019 09:17 PM
Last Updated : 01 Apr 2019 09:17 PM

அரியலூர் மாணவி நந்தினி பலாத்கார, கொலை வழக்கு: 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரியலூர் மாணவி கொலை வழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற தேவையில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க அரியலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 17 வயது மாணவி,  காணாமல் போனார். கீழமாளிகை கிராமத்தில் அழகுதுரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து பிணமாக அவரது உடல் மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் போலீஸார், மணிகண்டன் என்பவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கை ஜெயங்கொண்டம் டிஎஸ்பி விசாரித்து வந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி மாணவியின் தாயார் ராஜகிளி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு ஜெயங்கொண்டம் டிஎஸ்பி அளித்த பதிலில், இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழும், வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழும், கொலை குற்றச்சாட்டின் கீழும் வழக்கு பதியப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி இளந்திரையன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை வேறு அமைப்பு விசாரணைக்கு மாற்றவேண்டிய அவசியமில்லை எனக் கூறி, மனுவை முடித்து வைத்தார்.

அதேசமயம், வழக்கில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை சேர்த்து, இறுதி குற்றப்பத்திரிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x