

உண்மையான மருத்துவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் களே என்று எழுத்தாளர் சாந்தகுமாரி சிவகடாட்சம் கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவ உலகின் சமீபத்திய வளர்ச்சி, நிகழ்வுகள், மாற்றங்கள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:
உறுப்புதானம் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். மூளைச்சாவு அடைபவர் கள் பலரும் பரவலாக உறுப்புகளை தானமாக வழங்கிவிட்டு இறவாப்புகழ் பெறுவதன் விளைவு.. உறுப்புக்காக ஏங்கித் தவிக்கும் பலருக்கும் வாழ்க்கை கிடைக் கிறது. சில நாட்களுக்கு முன்பு, ஒரு மாநிலத்தைவிட்டு இன்னொரு மாநிலத்துக்குப் பயணித்த இதயத்தைப் பற்றியும் அது ஒருவருடைய விலைமதிப்பில்லாத உயிரைக் காப்பாற்றியதைப் பற்றியும் படிக்கும்போது நெகிழா தவர்கள் இருக்க முடியாது.
‘மீன் செத்தால் கருவாடு, மனிதன் செத்தால் வெறும்கூடு’ என்பதை மருத்துவ உலகம் பொய்யாக்கி வருகிறது. மனிதன் இறந்த பிறகும் அவனது கண்கள் மூலம் வேறொருவருக்கு பார்வை கிடைப்பதற்குக் காரணம் மருத்துவ உலகின் வளர்ச்சிதான்.
எதிர்பாராத விபத்து காரண மாகவோ, தீர்க்க முடியாத நோயின் காரணமாகவோ ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டால் அவரது இதயம், சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் முதலியவற்றை உறவினர் களின் சம்மதத்தோடு அவர்களது உடலில் இருந்து எடுத்து உயிருக்குப் போராடும் மற்ற நோயாளிகளுக்கு வழங்குகின்றனர். ‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’ என்பார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில், தானத்தில் சிறந்தது ‘உறுப்பு தானம்’ என்றே கூறவேண்டும். அதை மக்கள் மத்தியில் வலியுறுத்தவும் வேண்டும்.
இந்த நேரத்தில், இன்னொரு கருத்தையும் பகிரவேண்டும். மருத்துவர்கள் சம்பந்தமாக சமீப காலமாக பரபரப்பான பேச்சுகள், விவாதங்கள் அடிபடுகின்றன. பலவிதமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யுமாறு மருத்துவர்கள் கூறுவதன் பின்னணி யில் பணத்தாசை இருக்கிறது என்பதை மையமாகக் கொண்ட விவாதம் அது.
எல்லா துறைகளைப் போலவும் மருத்துவத் துறையிலும் விதிவிலக் குகள் இருக்கின்றன. அவ்வாறு, மனசாட்சியை விட்டும் மருத்துவத் துறையின் கண்ணியத்தையும் விட்டு விலகி நடக்கும் விதிவிலக்கு ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவ்வாறு விவாதத்துக்குள் சிக்கும் மருத்துவர்கள். அந்த ஒருசிலரைக் கொண்டு ஒரு துறை முழுவதை யுமோ, அந்த துறையினர் அனைவரையுமோ பொதுவாகக் குற்றம்சாட்டுவது சரியான கண்ணோட்டம் அல்ல.
உறுப்புகளை தானமாக வழங்குபவர்தான் பல உயிர்களைக் காப்பாற்றுகிறார். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில், அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்யும் மருத்துவருக்கும் உயிர்களைக் காப்பதில் முக்கிய மான பங்கு இருக்கிறது. பெரும்பாலும் அனைத்து மருத்துவர்களும் தங்களது இந்த சமூகப் பொறுப்பை உணர்ந்தே இருக்கிறார்கள்.
தொழில் தர்மப்படி, மனசாட்சிப்படி மருத்துவப் பணியாற்றுபவர்களே உண்மையான மருத்துவர்கள். அவ்வாறு செயல்படுபவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களே!