Published : 12 Apr 2019 10:34 AM
Last Updated : 12 Apr 2019 10:34 AM

மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி- சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதித்த வீரர்கள்!

அவர்களால் நடக்க முடியாது. சக்கர நாற்காலிதான் சுமந்து செல்லும். ஆனாலும், சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆம், கோவையில் நடந்த மாநில அளவிலான சக்கர நாற்காலி கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்திருக்கிறார்கள் மாற்றுத் திறனாளி வீரர்கள்.

பொதுவாகவே, மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பெரிய கவனத்தைப் பெறுவதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் நிச்சயம் அதைப் பார்த்து, அவர்களது தன்னம்பிக்கையை, விடாமுயற்சியை, தைரியத்தை, கடின உழைப்பைக் கற்றுக்

கொள்ள வேண்டும். பல்வேறு விளையாட்டுகளிலும் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு வருகின்றனர். அவ்வகையில், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டி தற்போது வேகமாய் பிரபலமாகி வருகிறது.

4-வது மாநில சாம்பியன்ஷிப்!

தமிழ்நாடு மாநில அளவிலான ஆண், பெண்களுக்கான 4-வது சக்கர நாற்காலி கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை,  கோவை கங்கா முதுகு தண்டுவட சீரமைப்பு மையம் நடத்தியது. இதற்கான ஏற்பாடுகளை சிற்றுளி அமைப்பு மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து சங்கம் செய்திருந்தன.

ஆண்கள், பெண்களுக்கான இந்தப் போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் வேலூர், சென்னை, கள்ளக்குறிச்சி, கோவை அணிகள் பங்கேற்றன. பெண்கள் பிரிவில் சென்னை, கோவை அணிகள் கலந்துகொண்டன. இதில், 60-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள்,  தங்களது ஆதரவுக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து விளையாடினர்.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதை நடத்த உதவிய, கங்கா எலும்பியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை,  பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. “கோவை கங்கா முதுகு தண்டுவட சீரமைப்பு மையத்தின் முக்கிய நோக்கமே, முதுகு தண்டுவடம் பாதித்த நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து,  அவர்கள் தங்களது வாழ்க்கையை யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே. மேலும்,  மாற்றுத் திறனாளிகளை விளையாட்டுப் போட்டிகளில் அவர்களைப் பங்குபெறச் செய்து, ஊக்குவிப்பதாகும்” என்றார் கங்கா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜசேகரன்.

போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான வசதிகளை சென்னையைச் சேர்ந்த கப்பல் பொறியாளர் பாலாஜி  செய்திருந்தார். காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவனம், வீரர்களுக்கான சான்றிதழ், மெடல் மற்றும் கோப்பைகளை வழங்கியது.

குன்னூர் தொழிலதிபர்  இந்திரஜித் சாட்டர்ஜி, ரோட்டரி சங்கத் தலைவர் அறிவுடை நம்பி ஆகியோர் போட்டிகளைத் தொடங்கிவைத்தனர். ரவுண்ட் ராபின் முறையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. அணிகள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், வெற்றி பெற்ற அணிக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் வேலூர் அணி முதலிடம் வென்றது. சென்னை, கள்ளக்குறிச்சி, கோவை அணிகள் முறையே 2, 3, 4-ம் இடத்தைப் பிடித்தன. பெண்கள் பிரிவில் சென்னை அணி வென்றது. கங்கா மருத்துவமனைத் தலைவர் டாக்டர் சண்முகநாதன், இயக்குநர்கள் டாக்டர் எஸ்.ராஜசேகரன், ரமா ராஜசேகரன் ஆகியோர், போட்டியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினர்.

இலவசமாக பயிற்சி!

இதுகுறித்து சிற்றுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜெ.குணசேகரன் கூறும்போது, ‘‘கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளிடம் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தி, அவர்களது  வாழ்வில் மாற்றத்தை உண்டாக்குவதற்காக 2017-ல் சிற்றுளி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. 2018 பிப்ரவரி மாதம் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி கூடைப்பந்துப் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயிற்சி அளிக்கத் தொடங்கினோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், சர்வதேச கூடைப்பந்து நடுவரும்,  பயிற்சியாளருமான ராஜன் வெள்ளிங்கிரிநாதன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற 5-வது தேசிய சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழக அணியில், கோவையில் பயிற்சி பெற்ற 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது. தற்போது 4, 5 மாவட்டங்களில்தான் சக்கர நாற்காலி கூடைப்பந்து அணி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டில் ஆர்வமிக்க, மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளித்தால், தேசியப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யலாம். கால் ஊனமுற்ற, நடையில் குறைபாடு உடைய அனைவருமே இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். பயிற்சி பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 98438 04387 என்ற எண்ணில் தொடர்புகொண்டால், இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். கங்கா மருத்துவமனை பல லட்சம் செலவில், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தை இதற்காக பிரத்யேகமாக உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x