Published : 05 Apr 2019 02:49 PM
Last Updated : 05 Apr 2019 02:49 PM

விவாதத்துக்கு நானும் தயார்: அன்புமணி சவாலை ஏற்றார் உதயநிதி

நீங்களோ, உங்கள் மகனோ என்னுடன் விவாதத்துக்குத் தயாரா என அன்புமணி ராமதாஸ் விடுத்த சவாலை ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்.

தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து நேற்று அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது ஸ்டாலின், உதயநிதி குறித்து கடுமையாக சாடினார்.

திமுகவில் நவீன தீண்டாமையை திமுக கூட்டணியில் கடைபிடிக்கிறார் ஸ்டாலின் என விமர்சித்த அன்புமணி, ''திமுகவினர் தனி நபர் விமர்சனங்களை மோசமாகச் செய்து வருகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது என்னைப் பற்றியும், எங்கள் நிறுவனர் ராமதாஸ் குறித்தும், முதல்வர் குறித்தும், பிரதமர் குறித்தும் மிக மோசமான, கொச்சையான வார்த்தைகளில் பேசி வருகிறார்.

ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும், கீழ்த்தரமான அதாவது தெருப்பேச்சாளர் பேசுவது போன்று பேசுகிறார். நான் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். நீங்கள் மேடையைப் போடுங்கள், நான் வருகிறேன். நீங்கள் வாருங்கள் அல்லது உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்புங்கள்.

தமிழ்நாட்டின் நலன் தமிழ்நாட்டின் திட்டங்களைப் பற்றி நாம் விவாதம் பண்ணலாம். நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன். நான் விவாதத்துக்குத் தயார் நீங்கள் தயாரா?'' என அன்புமணி சவால் விட்டிருந்தார்.

இதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த உதய நிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அது குறித்துப் பதிலளித்த அவர் தான் சவாலை ஏற்பதாகவும். அன்புமணி கூட்டத்தைப் போடட்டும். நானே வருகிறேன். முதலில் எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவித்தார்.

பல புள்ளி விவரங்களுடன் மத்திய மாநில அரசுகளை கலங்கடித்து வந்த அன்புமணி ராமதாஸ் தற்போது அவர்களுடனேயே கொள்கையற்ற கூட்டணி வைத்துள்ளதால் அவருக்குப் பேச எதுவும் கருத்து இல்லை. அதனால் திமுகவை வம்பிழுக்கிறார் என திமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x