என் தங்கை கனிமொழி- ஸ்டாலின் உருக்கம்

என் தங்கை கனிமொழி- ஸ்டாலின் உருக்கம்
Updated on
1 min read

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் உருக்கமாக அமைந்தது. இத்தொகுதியில் போட்டியிடும் கனிமொழியை, ஸ்டாலின் புகழ்ந்து தள்ளினார். உணர்ச்சிப்பெருக்கால் கனிமொழி கண்கலங்கினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசத்தொடங்கியதும்,  “இந்தத் தொகுதியில் எனது அருமை தங்கை கனிமொழி போட்டியிடுகிறார்” என அறிமுகம் செய்தார். தொடர்ந்து கனிமொழியை புகழ்ந்து பேசினார்.

“கடந்த 20-ம் தேதி கருணாநிதி பிறந்த திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய நான்  இன்று, கருணாநிதியின் மகள் போட்டியிடும் தூத்துக்குடிக்கு வந்துள்ளேன். கருணாநிதி இருந்திருந்தால் இதே மேடையில் கனிமொழிக்காக அவர் வாக்கு கேட்டிருப்பார். இன்று அவரது சார்பில்  நான் கேட்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் கருணாநிதியின் பிள்ளைகள்தான். ஆனால், இன்று தூத்துக்குடியில் கருணாநிதியின் பிள்ளையே நிற்கிறார்.

கனிமொழியை நான் அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. அவரை அறிமுகம் செய்வது கருணாநிதியை, என்னை அறிமுகம் செய்வது போலாகும். இங்கே கனிமொழி போட்டியிடுகிறார் என்றால் கருணாநிதியே போட்டியிடுகிறார், ஏன் நானே போட்டியிடுகிறேன் என்பதை உணர்ந்து ஆதரவு தர வேண்டும்.

கருணாநிதியின் மகள், என்னுடைய தங்கை கனிமொழி, கவிஞராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, பேச்சாளராக படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் தனக்கென முத்திரை பதித்து, சிறப்புக்குரிய இடத்துக்கு வந்துள்ளார். கலை இலக்கியவாதியாகவும் சமூகப் பேராளியாகவும் அவர் வளர்ந்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மரண தண்டனை ஒழிப்பு, ஸ்டெர்லைட் விவகாரம், நீட் தேர்வுக்கு விலக்கு, மீனவர் பிரச்சினை, இந்திய பல்கலைக்கழகங்களில் தலித் மாணவர்கள் பாகுபாடோடு நடத்தப்படும் கொடுமை, குலசேகரன்பட்டினத்தில் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் கோரிக்கை, மகளிருக்கான இடஒதுக்கீடு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, தமிழக உரிமைகள், தமிழர் நலன் என ஏராளமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வெற்றி கண்டுள்ளார். இவரைவிட சிறந்த வேட்பாளர் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு கிடையாது” என்று தொடர்ந்து பேசினார்.

ஸ்டாலின் பேசியதைக் கேட்டு கனிமொழி உணர்ச்சிபூர்வமாக காட்சியளித்தார். ஒரு கட்டத்தில் கனிமொழி கண் கலங்கினார்.  இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும்  நெகிழச் செய்தது.

ஸ்டாலின் தொடர்ந்து பேசும்போது, "பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு தூத்துக்குடி தொகுதிதான் கிடைத்ததா. வசமாக வந்து மாட்டிக் கொண்டீர்களே...  தோற்பதற்காகவே வந்துள்ளீர்களா, டெபாசிட் இழக்கப் போகும் அவருக்கு எனது அனுதாபத்தை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கட்சியே சதி செய்து அவரை இங்கே தள்ளிவிட்டிருக்கலாம் என நினைக்கிறேன்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in