Published : 22 Apr 2019 12:08 PM
Last Updated : 22 Apr 2019 12:08 PM

இந்து தமிழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி:  விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம் - கோவை சரக டிஐஜி ஜி.கார்த்திகேயன் அறிவுரை

ஐஏஎஸ் தேர்வை இலக்காகக் கொண்டு, விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி நிச்சயம் என்று கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் ஜி.கார்த்திகேயன் கூறினார்.

'இந்து தமிழ்', 'கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி' சார்பில் 'உனக்குள் ஓர் ஐஏஎஸ்' என்ற  வழிகாட்டு நிகழ்ச்சி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள  ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து காவல் துறை துணைத் தலைவர் ஜி.கார்த்திகேயன் பேசியதாவது: தேசத்தை வழிநடத்தும் பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியப் பங்குண்டு. அர்ப்பணிப்பு மிகுந்த இப்பதவிகளை அடைய, மத்திய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற வேண்டும். இந்த தேர்வை இலக்காகக் கொண்டு, கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி நிச்சயம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகள் கடும் அழுத்தம் மிகுந்தவை. பல்வேறு பக்கங்களில் இருந்தும் நெருக்கடிகள் வரும். அதையெல்லாம் சமாளித்து, மக்கள் சேவையைப் பிரதானமாகக் கொண்டு செயல்பட வேண்டும். நெருக்கடிக்கு பயந்து, தவறான முடிவை எடுத்துவிடக்கூடாது. எனவே, மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க, தற்போதிலிருந்தே பழகிக்கொள்ள வேண்டும்.

மற்ற தேர்வுகளைப்போல இல்லாமல், ஐஏஎஸ் தேர்வு பல நிலைகளைக் கொண்டது. தேர்வில் வெற்றி பெற்றால், நிச்சயம் உயர்ந்த நிலையை அடையலாம். எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தாலும், தேர்வில் வெல்ல சமவாய்ப்பு உண்டு. பிளஸ் 2 முடித்து, கல்லூரியில் படிக்கத் தொடங்கும்போதே, போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகத் தொடங்க வேண்டும்.

தெளிவான குறிக்கோளுடன், அதை அடையும் இலக்குடனேயே விடாமல் பயணிக்க வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஒவ்வொருவரும் முதலில் அவரவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்மை பிறர் எடைபோட அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு பாடத்தையும் ஆழ்ந்து படிக்க வேண்டும். அதேபோல, நாளிதழ்களையும் விடாமல் படிக்க வேண்டும்.

முன்பெல்லாம் நல்ல புத்தகங்கள், தகவல்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது. நவீனத் தொழில்நுட்ப வசதியால் அவை எளிதில் கிடைக்கின்றன. அதேசமயம், ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. தேவையானவை எவை, தேவையற்றவை எவை என்பதை அறிந்துகொண்டு, தகவல்களைச் சேகரிக்க வேண்டும். காலத்திற்கேற்ற மாற்றங்களை அனுசரித்து, சூழலுக்குத் தக்கவாறு பயில வேண்டும். சுதந்திர சிந்தனையும், ஆழ்ந்த அறிவும், புதுமையான முயற்சிகளும், நேர மேலாண்மையும் வெற்றிக்கு உதவும்.  இவ்வாறு அவர் பேசினார்.

ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் கே.கருணாகரன், வட்டமலைப்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு, `இந்து தமிழ்' விநியோகப் பிரிவுத் தலைவர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   ‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

இதில், ஐஏஎஸ் படிப்பதற்கான அடிப்படை  கல்வித் தகுதி, கல்வி பயிலும் முறை, பயிற்சி மையங்கள் குறித்த பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத் திட்ட கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

சுறா வேட்டைக்கு வெறுங்கையுடன்  செல்ல முடியுமா?

நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசும்போது, "உலகில் 6-ல் ஒரு பங்கு மக்கள்தொகை இருக்கும் இந்தியாவை, வெறும் ஆறாயிரத்துக்கும் குறைவான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளே ஆள்கிறார்கள். இந்த ஆறாயிரம் என்பதுகூட தோராய மதிப்பீடுதான். 130 கோடி இந்திய மக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடத்தில் நம்முடைய ஆட்சியாளர்களுடன் சேர்ந்து, வெறும் 130-க்கும் குறைவான உயரதிகாரிகள், முக்கியமான அரசுத் துறைச் செயலர்கள்தான் தீர்மானிக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஐஏஎஸ் கனவு என்றால், மாவட்ட ஆட்சியர் என்பதுடன் சுருங்கிவிடக் கூடாது. பிரதமர் அலுவலகச் செயலர், முதன்மைச் செயலர், மாநிலத்தின் தலைமைச் செயலர் என்று விரிய வேண்டும். இந்த இடங்களில் எல்லாம் தமிழ் இளைஞர்கள் சென்று அமர வேண்டும். இது சுறா வேட்டைக் கனவுதான். நம்மைத்  தகுதிப்படுத்திக்கொண்டு,  திட்டமிட்டு, அயராது உழைத்தால் அது இயலாத காரியம் அல்ல. அதேநேரம்,  `தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இல்லை' என்று சொல்வீர்களேயானால், இலக்கை அடைவது சிரமம்தான்.

சுறா வேட்டைக்குச் செல்பவர்கள்  கடலுக்குள் வெறும் கையோடு செல்ல முடியுமா? அதேபோல, வாசிப்பு இல்லாமல் போட்டித் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்? இந்த தேர்வுக்கு நமக்கு வழிகாட்டுவது வாசிப்புதான். அதில் ஒன்று பத்திரிகை வாசிப்பு. தினமும்  குறைந்தது ஒரு தமிழ் நாளிதழ், ஓர் ஆங்கில நாளிதழையாவது இரண்டு மணி நேரத்துக்கு வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் உண்டாக்கிக்கொள்ளுங்கள். வாரம் ஒரு புத்தகத்தையேனும் படிக்கத் திட்டமிடுங்கள்" என்றார்.

வெற்றி பெறுவது எளிதாகும்

கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனத் தலைவர் பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன் பேசும்போது, "மத்திய அரசின் குடிமைப் பணியியல் தேர்வு 3 நிலைகளைக் கொண்டது. முதல்நிலைத் தேர்வின் இரு தாள்களில், தலா 100 மதிப்பெண்களுக்கு பொது அறிவு மற்றும் எஸ்எஸ்எல்சி முதல் பிளஸ் 2 வரையிலான பாடத் திட்டங்களை உள்ளடக்கிய கேள்விகள் கேட்கப்படும்.

அடுத்த பிரதான தேர்வில் 1,000 மதிப்பெண்களுக்கு பொதுப் பாடத்திலிருந்தும், 500 மதிப்பெண்கள் விருப்பப் பாடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். 250 மதிப்பெண்களுக்கு கட்டுரை எழுத வேண்டும். இறுதியில் நடைபெற உள்ள  நேர்காணல் 275 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஐஏஎஸ் தகுதியை இலக்காகக் கொண்டு, முறையாகத் திட்டமிட்டு, முழு நேரம் படிக்க வேண்டும். சிறந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்தும் படிக்கலாம். இதன் மூலம்  ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது எளிதாகும்" என்றார்.

ஆஷிக், கல்லூரி மாணவர், ஈச்சனாரி: இந்த நிகழ்ச்சிக்குப்பிறகு, ஐஏஎஸ் தேர்வை எழுதுவதற்கான உத்வேகம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு தெளிவாக பதில் அளித்தனர். நாளிதழ் வாசிப்பின் அவசியம், ஐஏஎஸ் தேர்வுக்கு எந்தெந்தப் புத்தகங்களை படிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தன.

கவின்மொழி, கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவி: இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்பு ஐஏஎஸ் தேர்வு குறித்த பயம் இருந்தது. தற்போது பயம் நீங்கி, நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஐஏஎஸ் தேர்வை ஏன் எழுத வேண்டும், எதற்காக நாம் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டுமென்ற தெளிவு கிடைத்துள்ளது.

ஜெய்ஸ்ரீ நந்தினி, கல்லூரி மாணவி, திருப்பூர்: ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றால், எந்த மாதிரியான பணிகளில் சேரலாம், அதன் வகைகள் குறித்தெல்லாம் தெரிந்துகொண்டேன். தமிழ் வழியிலும் தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம் என்பதையும் இங்கு வந்துதான் அறிந்துகொண்டேன். ஐஏஎஸ் தேர்வை அணுகுவது குறித்த பல குழப்பங்களுக்கு விடை கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x