Last Updated : 30 Apr, 2019 09:02 AM

 

Published : 30 Apr 2019 09:02 AM
Last Updated : 30 Apr 2019 09:02 AM

9 ஆண்டுகளாக தொடரும் பாதாள சாக்கடை திட்டப் பணி!- திணறும் கோவை மக்கள்

கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களால், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாலையோர சாக்கடைகள் மற்றும் பாதாள சாக்கடைகள் கோவையில் பயன்பாட்டில் உள்ளன. 

2009-ல் மத்தியஅரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தில், அப்போது  கோவை மாநகரில் இருந்த 72 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப் பணி தொடங்கப்பட்டது. மூன்று பிரிவுகளாக திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டது. முதல்பிரிவில் ரூ.69.65 கோடி மதிப்பில் 166.72 கிலோமீட்டர் தொலைவுக்கும், இரண்டாம் பிரிவில் ரூ.56.30 கோடி மதிப்பில்  126 கிலோமீட்டர் தொலைவுக்கும் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 3வது பிரிவில் ரூ.143.65 கோடி மதிப்பில்  297.46 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த 3-வது  கட்ட பாதாள சாக்கடைத் திட்டம்,  கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் கிழக்கு, வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தொடங்கப்பட்டு, தற்போது வரை பணிகள் முடியவில்லை.  மூன்று ஆண்டுகளில் முடிக்கத்  திட்டமிட்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைப் பணி 9 ஆண்டுகளாக தொடர்கிறது. மொத்தம் 583 கிலோமீட்டர் தொலைவுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது வரை சுமார் 570 கிலோமீட்டர் தொலைவுக்கு மட்டுமே நிறைவேறியுள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்  பீளமேடு  சரவணன் கூறும்போது, “திருச்சி சாலை, ஒண்டிப்புதூர், பீளமேடு பயனீர் மில் சாலை, விளாங்குறிச்சி சாலை  உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக, திருச்சி சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து ஒண்டிப்புதூர் வரை 6 கிலோமீட்டர் தொலைவுக்கான பணிகள் தாமதமாகி வருகின்றன. பாதாள சாக்கடை திட்டப் பணி மேற்கொள்ளப்பட்ட சாலைகள் சரிவர சீரமைக்கப்படாமல், குண்டும், குழிகளாக காணப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமப்படுகின்றனர்.  மழைக்காலங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. எனவே, பாதாள சாக்கடை  திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். 

ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு மையம்

ஒண்டிப்புதூர் பட்டணம் சாலைப்பகுதியில் உள்ள  இட்டேரியில் ரூ.67.82 கோடியில், 14.30 ஏக்கர் பரப்பில் தினமும் 90 எம்.எல்.டி. கழிவுநீரை  சுத்திகரிப்பு செய்யும் வகையில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டது. மூன்றாம் கட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தின்படி வரும் சாக்கடைக் கழிவுநீர் இம்மையத்துக்கு கொண்டுவரப்பட்டு, சுத்திகரிப்பு செய்யத்  திட்டமிடப்பட்டது.

மூன்றாம் கட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மந்தகதியில் நடப்பதால்,  ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் முழு பயன்பாட்டுக்கு வரவில்லை.  இரண்டாம் கட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, நஞ்சுண்டாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்ட மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், சில காரணங்களால் கட்டுமானப் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து பசுமைத்  தீர்ப்பாயத்தில்  சிலரால்  வழக்கும் தொடரப்பட்டது. இதில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து,  ரூ.43 கோடி மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டத் திட்டமிடப்பட்டும், பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன” என்றார்.

பணிகள் தீவிரம்!

இதுகுறித்து மாநகராட்சி உயரதிகாரிகள் கூறும்போது, “மாநகரில் பாதாள சாக்கடை திட்டப் பணி தீவிரமடைந்துள்ளது. திருச்சி சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவுக்கு  பாதாள சாக்கடைக் குழாய் பதிக்கும் பணி வேகமெடுத்துள்ளது. ஒரு சில மாதங்களுக்குள்இந்தப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, நஞ்சுண்டாபுரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாதாள சாக்கடைக் குழாயுடன், வீட்டு கழிவுநீர்க் குழாய்களை இணைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x