Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM

கடும் கோடை எதிரொலியால் வனத்தில் அமைத்த ஆழ்குழாய் கிணறுகள் வறண்டன: ஆற்றுப் படுகைகளில் ஊற்றுப்பள்ளம் தோண்டும் வனத்துறையினர்

கோடையால், தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுள்ள நிலையில், வன விலங்குகளின் உணவு, குடிநீர் தேவையைத் தீர்க்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் 7 வட்டத்திலும் கணிசமான பகுதி வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளுக்குள் காட்டெருமை, மான், காட்டுப்பன்றி, முயல், நரி, செந்நாய் உள்ளிட்ட விலங்கினங்களும், ஏராளமான பாம்பினங்கள் மற்றும் பறவையினங்களும் வசிக்கின்றன. இவைதவிர ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு வனச் சரக பகுதிகளில் மற்ற விலங்கினங்களுடன் யானை மற்றும் சிறுத்தை ஆகிய விலங்கினங்களும் வசிக்கின்றன.

இந்த விலங்கினங்களுக்கான உணவு மற்றும் குடிநீர் தேவை இதர காலங்களில் வனத்துக்குள்ளேயே நிறைவடைந்து விடுகிறது. கோடை காலத்தில் மட்டும் அடிப்படை தேவைகளுக்காக வன விலங்குகள் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக தண்ணீர் தேவைக்காக விலங்கினங்கள் அலையும் நிலைக்கு உள்ளாகின்றன.

இவ்வாறு அலைந்து திரியும் விலங்கினங்கள் பின்னர் வனத்திலிருந்து வெளியேறி வனத்தை ஒட்டிய விளைநிலங் களுக்குள் நுழைகின்றன. விலங்கினங்கள் வனங்களில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் கோடை காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது வழக்கம். விலங்கினங்களின் குடிநீர் தேவைக்காக வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை குளங்கள், நீர் தொட்டிகள் போன்றவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நீர் நிரப்புவது, குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த தொட்டிகளை சுத்தமாக்கி மீண்டும் நீர் நிரப்புவது, யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் சமதள பரப்பில் மக்காச் சோளம் போன்ற பயிர் வகைகளை விதைப்பு செய்து தீவனம் வளர்ப்பது, யானைகளின் தேவைக்காக அவை நடமாடும் பகுதிகளில் உப்புக் கட்டிகளை வீசுவது போன்ற பணிகள் இவற்றில் அடங்கும். நடப்பு ஆண்டில் கடும் வறட்சி காரணமாக ஆழ்குழாய் கிணறுகள் வறண்டதால் விலங்கினங்களை வனத்துக்குள்ளேயே தடுக்க வழி தெரியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியது:வனத்துறை சார்பில் வனப் பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ் குழாய் கிணறுகளில் ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலானவை வறண்டு விட்டன. மிகப்பெரும் பரப்பளவு கொண்ட வனத்தில், விலங்கினங்களின் தேவைகளுக்காக தண்ணீர் இறைக்க சில இடங்களில் மட்டுமே ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ளோம். அகன்ற நீராதாரப் பரப்பு இருந்தபோதும் குறைந்த அளவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளும் இந்த ஆண்டு வறண்டு விட்டன. போதிய மழையின்மையும், வனத்துக்கு வெளியில் உள்ள நிலப்பரப்புகளில் நிலத்தடி நீரை தொடர்ந்து உறிஞ்சுவதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

இன்னும் 2 மாதங்கள் வரை நீடிக்க உள்ள கோடை காலத்தை எவ்வாறு சமாளிப்பது என்றும், விலங்கினங்களின் குடிநீர் தேவையை எவ்வாறு நிறைவேற்றுவது என்றும் புரியாமல் தவித்து வருகிறோம். இதற்கிடையிலும், வெளியில் இருந்து டேங்கர் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று வனத்தில் உள்ள சில நீர்த்தொட்டிகளை நிறைத்து வருகிறோம். வெளியிலும் தண்ணீர் கிடைப்பது சவாலான காரியமாக உள்ளது. இதுதவிர, வனத்தில் ஆற்றுப் படுகைகளில் சில இடங்களை தேர்வு செய்து பொக்லைன் இயந்திரம் மூலம் தற்காலிக பள்ளம் தோண்டியுள்ளோம். இதில் சுரக்கும் ஊற்று நீர் விலங்கினங்களின் தாகத்தை தணிக்க உதவும் என இவற்றை அமைத்தோம். ஆனால் அந்தப் பகுதிக்கு யானைகள் கூட்டமாக செல்லும்போது பள்ளம் தூர்ந்து நீர் சுரப்பு அடைபட்டு விடுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே சில நாட்களில் மழை கிடைத்தது. இந்த ஆண்டு இதுவரை கோடை மழை பெய்யவே இல்லை. நடப்பு ஆண்டில் தண்ணீர் தேவைக்காக தவிக்கும் விலங்கினங்களுக்காகவாவது இயற்கை கருணை காட்ட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு காத்திருக்கிறோம்.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x