

இமான் அண்ணாச்சி நிகழ்ச்சியின்போது அணியும் 41.5 சவரன் தங்க நகைகளை அவரது வீட்டிலுள்ள பீரோவிலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.
'சொல்லுங்கண்ணே சொல்லுங்க' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த அவர் பின்னர் அதில் கிடைத்த வரவேற்பை அடுத்து சன்டிவிக்குத் தாவினார். அங்கு 'குட்டிச் சுட்டீஸ்' நிகழ்ச்சிப் பிறகு 'சீனியர் சுட்டீஸ்' நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இதனிடையே இமான் அண்ணாச்சி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது திமுக மேடைப் பேச்சாளராகவும் உள்ளார். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இமான் அண்ணாச்சி கையில் பிரேஸ்லெட், கழுத்தில் மிகப்பெரிய செயின், மோதிரங்கள், விலை உயர்ந்த் வாட்ச் முதலியவற்றை அணிந்திருப்பார்.
இமான் அண்ணாச்சி சென்னை அரும்பாக்கம், வெங்கட கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தனது மனைவி குழந்தைகளுடன் அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றுள்ளார். ஊருக்குப் போகும்முன் நிகழ்ச்சியின்போது தான் அணியும் 6.5 சவரன் மதிப்புள்ள 4 மோதிரங்கள், 15 சவரன் மதிப்புள்ள பிரேஸ்லெட், 20 சவரன் மதிப்புள்ள செயின், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள டைடன் வாட்ச் ஆகியவற்றைக் கழற்றி பீரோவில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
மீண்டும் கடந்த 22-ம் தேதி வீடு திரும்பியுள்ளார். வீட்டில் பீரோவைத் திறந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் கழற்றி வைத்திருந்த 41.5 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச் உள்ளிட்டவற்றைக் காணவில்லை.
வீட்டில் ஆள் இல்லாத நேரம் மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? அல்லது வீட்டுக்கு வழக்கமாக வந்து செல்லும் யாரேனும் திருடிச் சென்றார்களா என்பது தெரியாததால் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் நகை களவுபோனது குறித்து இமான் அண்ணாச்சி புகார் அளித்துள்ளார்.