எதிர்க்கட்சிகளை கட்டிப் போட்டு பெற்றது வெற்றியா?- திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

எதிர்க்கட்சிகளை கட்டிப் போட்டு பெற்றது வெற்றியா?- திமுக தலைவர் கருணாநிதி கேள்வி
Updated on
1 min read

எதிர்க்கட்சிகளின் கைகளையும், கால்களையும் கட்டிப் போட்டு அனைத்து மோசடி முறைகேடுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக மார்தட்டிக் கொள்வதற்குப் பெயரா வெற்றி? என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங் களுக்கான இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டன. காரணம் அவர் களுக்கெல்லாம் அதிமுகவினர் இடைத் தேர்தல்களில் என்னென்ன திருகுதாளங்களில் ஈடுபடுவார்கள் என்பது முன்பே தெரிந்திருந்தது. இறுதியாக இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து பாஜகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளுமே போட்டியிட முன்வந்தன. ஆனால், அவர்களையாவது இந்தத் தேர்தலில் ஜனநாயக ரீதியாகப் போட்டியிட ஆளும் கட்சியினர் அனுமதித்தார்களா?

நெல்லையில் தேர்தலே நடைபெறாத அளவுக்கு செய்து விட்டார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்தார்களோ, அவர்களில் பலருடைய வேட்பு மனுக்களை நொண்டிக் காரணம் கூறித் தள்ளுபடி செய்து விட்டார்கள். தள்ளுபடி செய்யப்பட முடியாதவர்களையெல்லாம் சரிக்கட்டி வேட்பு மனுக்களை வாபஸ்பெறச் செய்து விட்டார்கள். முக்கியமாக பாஜக வேட்பாளரின் வேட்பு மனுவை கடைசி நாளன்று வாபஸ் பெறச் செய்ததோடு, அந்த வேட்பாளரையே அதிமுகவிலே சேர்த்து விட்டார்கள். இப்படிப்பட்ட நகைச்சுவைக் கூத்து பல இடங்களில் நடந்தது.

எதிர்க்கட்சிகளின் கைகளை யும், கால்களையும் கட்டிப் போட்டு, வாய்ப் பூட்டும் போட்டு விட்டு, தேர்தலை நடத்துவதாகக் கூறி அனைத்து மோசடி முறைகேடுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக மார்தட்டிக் கொள்வதற்குப் பெயரா வெற்றி? இதுபோன்ற செயல்கள் இப்படியே நீடிக்குமானால் ஜனநாயகத்தை அருங்காட்சியகத்தில்தான் காண நேரிடும். இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in