குறும்பு வீடியோக்களுக்குத் தடை; தொலைக்காட்சிகள் வெளியிடக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

குறும்பு வீடியோக்களுக்குத் தடை; தொலைக்காட்சிகள் வெளியிடக் கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தற்போது டிக் டாக் செயலி நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளது. இந்தச் செயலி சீனாவில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் செயல்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டின் கள ஆய்வில் 500 மில்லியனுக்கு அதிகமானோர் டிக் டாக் செயலியைப் பயன்படுத்துகிறார்கள்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

டிக் டாக்  செயலியை பல இளைஞர்கள் தவறான பாதையில் பயன்படுத்துகிறார்கள். அதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தோனேசியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், "புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும்" என, கருத்து தெரிவித்தனர்.

பின்னர் டிக் டாக் செயலியைத் தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கறிஞர் முத்துக்குமார் தரப்பில், "பிராங்க் ஷோ என்று சொல்லக்கூடிய குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகையால் அதற்கும் தடை விதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பிராங்ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in