

2019 மக்களவைத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் யதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகள்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நாளை (ஏப். 18) நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்திவருகின்றன.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சோதனை நடைபெறவில்லை எனவும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வீடுகளில் சோதனை நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன. குறிப்பாகத் தமிழகத்தில் திமுகவின் துரைமுருகன், அனிதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும், விசிகவினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடந்தன.
நேற்று தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிதம்பரம், ''தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் யதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?!
கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி'' என்று தெரிவித்துள்ளார்.