

முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது கொலைப் பழி சுமத்தப்பட்டதால், அவரைக் கட்டம் கட்டினார் ஜெயலலிதா.
இதனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவரது கலசப்பாக்கம் தொகுதியில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ ஆனார். இந்த நிலையில், எடப்பாடியார் முதல்வர் ஆனதும் மீண்டும் கட்சிக்குள் கால்பதித்தார் அக்ரி. இதை எதிர்த்தார் பன்னீர்செல்வம்.
ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்ரியை திருவண்ணாமலையில் நிறுத்தியது தலைமை.
இதை எதிர்த்துக் கிளம்பிய பன்னீர்செல்வம், “கொலை வழக்கில் சிக்கிய ஒருவரை தேர்தலில் நிறுத்தலாமா?” என்று கொடி பிடித்தார். பன்னீரை சமாதானப்படுத்தும்படி அக்ரிக்கு தலைமையிலிருந்து தகவல் போனது.
உடனே, பன்னீரிடம் பேசிய அக்ரி தரப்பு, “அண்ணே ஜெயிச்சு டெல்லிக்குப் போய்ட்டாருன்னா அடுத்த முறையும் நீங்க கலசப்பாக்கத்துல நிக்கலாம். அப்படி இல்லாட்டி நாளைக்கு கலசப்பாக்கத்துக்கும் அவரு பங்குக்கு வருவாரு” என்று பக்குவமாய் எடுத்துச் சொன்னதாம்.
இதையடுத்து, பணிவின் உச்சிக்கே சென்ற பன்னீர், “கலசப்பாக்கம் தொகுதியில் அண்ணன் அக்ரிக்கு அதிகப்படியான வாக்குகளை வாங்கித் தருவேன்” என்று இப்போது அதிரடி பிரச்சாரம் செய்துவருகிறார்.