

சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடந்த எழுத்து தேர்வில், கேள்வி ஒன்றுக்கு மதிப்பெண் வழங்க கோரி அருணாச்சலம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த கேள்விக்கான சரியான விடையை கண்டுபிடிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஐஐடி பேராசிரியர் என்ற பெயரில் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கைபடி, அருணாச்சலத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த அறிக்கை போலியானது என்றும், டி.மூர்த்தி என்ற பேராசிரியர் சென்னை ஐ.ஐ.டி.யில் பணியாற்றவே இல்லை என்றும் மனுதாரர் அருணாச்சலம் தரப்பில் முறையிடப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியம் உறுப்பினர் செயலர் மீது உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் ஆணையர்மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த விவகாரத்தில் உயர் அதிகாரி என்கிற முறையில் சீருடை ஆணைய டிஜிபி திரிபாதிதான் பொறுப்பாக வேண்டும், ஆனால் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட ஐஜி தாமரைக்கண்ணன் மீதுதான் அவமதிப்பு வழக்கு என டிஜிபி திரிபாதியை விடுவித்தது உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் (ஐஜி) மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட முடியாது என அரசுத்தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வினா முறைகேடு தொடர்பாக காவல் ஆணையர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கி விசாரணையை செப்டம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதற்கிடையில், மோசடி வழக்கை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பின் கீழ் விசாரிக்க வேண்டும் என்ற மூர்த்தி தரப்பின் கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.