Last Updated : 05 Apr, 2019 12:00 AM

 

Published : 05 Apr 2019 12:00 AM
Last Updated : 05 Apr 2019 12:00 AM

தேர்தல் படுத்தும்பாடு: ‘தானாகவே’வரக்கூடிய போடி ரயிலுக்கு போட்டி போட்டு வாக்குறுதி

மதுரை-போடி மீட்டர் கேஜ் பாதையில் 1928-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டன. இதற்காக ஆண்டிபட்டி மலைப் பகுதிகளை குடைந்து பாதை அமைக்கப்பட்டது. மதுரையில் இருந்து நாகமலை, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி உட்பட பல நிறுத்தங்களைக் கடந்து போடி சென்றது.

முதல் ரயில் இயக்கத்தை சென்னை மாகாண வருவாய் உறுப்பினர் நார்மன்மார் ஜோரி பேங்க்ஸ் தொடங்கி வைத்தார். இரண்டாம் உலகப் போரின்போது 1942-ல் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் சுதந்திரம் பெற்ற பிறகு 1953-ல் மீண்டும் இயக்கப்பட்டது.

போடி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் அதிக அளவில் இந்த ரயில் மூலம் வடமாநிலங்களுக்கு அனுப்பப் பட்டன. இது வணிகர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ரயில் வேயும் இதன் மூலம் உரிய வருவாய் பெற்றது. இந்நிலையில் மதுரை-போடி இடையே அகல ரயில் பாதை அமைக்க 2008-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ரயில் 2010-ல் மீண்டும் நிறுத்தப்பட்டது. 90 கி.மீ. தூரத்துக்கு ரூ.170 கோடி மதிப்பில் அகல பாதையாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக தண்டவாளங்கள் அகற்றப்பட்டன. விரைவில் தங்கள் பகுதியில் அகல ரயில் ஓடும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அகல ரயில் பாதை பணியில் தொய்வு ஏற்பட்டது. ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக தேனி மாறியது.

இதனால் இம்மாவட்ட வர்த்தர்கள், பொதுமக்கள், ரயில் பயணிகள் ஆகியோர் பணியை விரைவுபடுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது செக்கானூரணி வரை தண்டவாளங்கள் அமைக்கப் பட்ட நிலையில் அடுத்தடுத்த கட்டங் களாக பணி நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் வாதிகளின் வாக்குறுதிகளில் இந்த ரயில் இயக்கமும் இடம் பிடித்துள்ளது. அவ்வப்போது நிதி ஒதுக்கி பகுதி வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ‘வேட்பாளர்கள் கொண்டு வரும் திட்டமாக’ அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டு வரு கிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரி கள் தரப்பில் கேட்ட போது, இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு முறையாக இருந்தால் துரிதமாக முடிந்துவிடும். இதில் எம்பி.க்களின் பங்கு பெரிய அளவில் தேவைப்படாது. இருப்பினும் நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டால் அவர்கள் அழுத்தம் தந்து கேட்டுப் பெறலாம். மற்றபடி இத்திட்டம் ‘இயல்பாகவே’ இப்பகுதிக்கு நடைமுறைப்படுத்தப்படும். திண் டுக்கல்-குமுளி, மதுரை-குமுளி என்று புதிய பகுதிகளுக்கான ரயில் இயக்கத்துக்கு இவர்கள் முயற்சி செய்யலாம் என்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், இம்மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவர்கள் தரப்பில் இருந்தும் ரயில் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. எனவே புதிதாகப் பொறுப்பேற்கும் எம்பி.க்கள் போடி ரயிலை இயக்கத்துக்கு கொண்டு வருவதுடன், திண்டுக்கல்- குமுளிக்கு ரயில் பாதை திட்டத்துக்கும் முயற்சி செய்ய வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x