

பொள்ளாச்சியில் பாலியல் குற்றவாளிகளுக்கு துணை சபாநாயகரும், அமைச்சர் வேலுமணியும் துணைபோவது நியாயமா என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை), பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
"பொள்ளாச்சியில் இருந்து வரக்கூடிய கொடுமையான செய்திகள் ஒருவிதமான மனத்துன்பத்தை எனக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. எத்தனையோ பிரச்சினைகளைப் பற்றிப் பேசும்பொழுது ஏற்படாத மனத்துன்பம், இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசுகின்ற பொழுது நம்மையே அறியாமல் வேதனைப்படுகின்றோம். ரத்தக் கண்ணீர் வடிக்கிறோம், மனம் ததும்புகின்றது.
நானும் ஒரு மகளைப் பெற்றவன் தான். நானும் ஒரு மகளுக்கு தந்தையாக இருக்கக் கூடியவன் தான். அதனால் தான் எனக்கு அந்த வருத்தம் மேலோங்கி நிற்கின்றது. எனக்கு மட்டுமல்ல பெண்ணைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் யாராக இருந்தாலும் இருக்கக்கூடிய உண்மை அது தான்.
ஆபாசமாகப் படம் எடுத்து சம்பந்தப்பட்டபெண்களை மிரட்டிய கயவர்கள் ஒரு பக்கத்தில் இருக்கின்றார்கள். அதைவிட மோசமான அளவுக்கு குற்றம் செய்தவர்கள் காவல்துறை அதிகாரிகளே என்று நான் பகிரங்கமாகச் சொல்ன்றேன்.
பொள்ளாச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படக்கூடிய சூழ்நிலை இன்றைக்கு நாட்டில் வந்துள்ளது.
பலவந்தமாக கடத்திக் கொண்டுவந்து பங்களாக்களில், பண்ணை வீட்டில், கொண்டு சென்று அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ படம் எடுத்து, அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு போட்டுக் காட்டி பயமுறுத்தி, அச்சுறுத்தி, பணம் பறித்து, இவ்வளவு பெரிய கொடுமை நடந்துள்ளது.
காவல்துறைக்கு என்று ஒரு தலைவர் இருக்கின்றாரே டி.ஜி.பி. ராஜேந்திரன். அவருக்கு இது தெரியாதா? பாவம் அவர் குட்கா விற்பனையில் மும்முரமாக இருக்கிறார். அதிலே அவருக்கு நேரம் இல்லை.
இந்த கடைந்தெடுத்த கயவர் கும்பலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை நிற்பது நியாயமா? துணை சபாநாயகராக இருக்கக்கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் துணை நிற்பது நியாயமா? அமைச்சராக இருக்கும் வேலுமணி இதற்குப் பின்புலமாக நிற்பது நியாயமா?
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரும் ஒரு பெண் தான். இது கூட அவருக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டதா? ஆத்திரம் கண்ணை மறைக்கின்றது.
எனவே, யாரையாவது அவர்கள் சிக்க வைத்துவிட்டு தாங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும், என்று பாதிக்கப்பட்ட பெண்ணை காட்டிக் கொடுத்திருக்கின்றார்கள். இந்த நேரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள், எந்தளவுக்கு சம்பந்தப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை போலீஸார் வெளிச்சத்திற்கு கொண்டு வர மாட்டார்கள்.
2 வருடத்திற்கு முன்பு என்ன நடந்தது? ஏற்கெனவே அதகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. சில பெண்களை காரில் கடத்திக் கொண்டு செல்லும் பொழுது ஒரு பெண் காரிலிருந்து குதித்து இறக்கின்ற செய்தி வெளிவந்ததா இல்லையா, எப்படி இறந்தார்? என்ன காரணம்? அதற்கு விடை காண வேண்டாமா? பொறுப்பில் இருக்கக்கூடியவர் தானே அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
பெண்களை வசியப்படுத்த பெய்டு கேங்க் என்ற ஒரு கும்பல் செயல்படுவதாக, ஏற்கெனவே ஊடகத்தில் செய்தி வந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டிருக்கும் ஆரிஸ் என்பவருக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கும் தொடர்பு இருந்தது. அந்த ஆரிஸும் இப்பொழுது கைது செய்யப்பட்ட ரிஷ்வந்தும் ரொம்ப நாள் நண்பர்களாக இருந்தனர்.
சமூக அக்கறையோடு நான் பேசுகின்றேன். பெண்களின் நலனுக்காக நான் பேசுகின்றேன். ஒரு தந்தையாக நின்று பேசுகின்றேன். எடப்பாடி பழனிசாமிக்கு பெண் குழந்தை இல்லையா? பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பெண் குழந்தை இல்லையா? அந்தக் குடும்பத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பட்டிருந்தால், எப்படி துடிதுடித்துப் போய் இருப்பார்கள். தற்கொலை செய்துகொண்டும் மாண்டு போயிருப்பார்கள், எனவே, அந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெற்றோர்களின் நிலைமையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
ஒரு தந்தையாக இருந்து, 200-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பெண்களுக்கு செய்யப்பட்டு இருக்கக்கூடிய இந்த அநீதிக்கு நிச்சயமாக, வரக்கூடிய திமுக ஆட்சியின் மூலம் நீதி கிடைக்கும்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.