

இலங்கை குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதி ஹசீமுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரத்தில் முகாமிட்டு சிலரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிருத்துவ தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அங்குள்ள என்.டி.ஜே அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பையும் தடை செய்தது.
குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை, தொடர் விசாரணை என நூற்றுக்கணக்கானோரை பிடித்து இலங்கை புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இண்டர்போல் உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணையில் குதித்துள்ளன.
இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக இந்தியாவிலும் உளவுத்துறை, ரா, என்.ஐ.ஏ அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இலங்கைக்கு அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.ஐ.ஏ முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது.
குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு தலைவனாக செயல்பட்டது ஜக்ரான் பின் ஹாசிம் என்ற தீவிரவாதி என்பது தெரியவந்தது. ஜக்ரான் பின் ஹாசிமும் இந்த தாக்குதலில் பலியானான்.
தொடர்ந்து இலங்கை புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் ஜக்ரான் பின் ஹசீமுக்கு கூட்டாளி ஒருவன் இருந்ததாகவும் அவன் பெயர் ஹசன் என்பதும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் அடையாளம் காணப்படாமல் இருப்பவர்களில் ஒருவனாக ஹசன் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் தீவிரவாதி ஹசன் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சென்னைக்கு வந்து சென்ற தகவல் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்துள்ளது.
ஹாசிமுடன் தொடர்பில் உள்ளவர்களின் பட்டியலை எடுத்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இதில் தொடர்புடைய சிலர் ராமநாதபுரத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கீழக்கரையில் டிஎஸ்பி தலைமையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய கும்பல் தலைவன் என்று கருதப்படும் ஹாசிம் உடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடப்பதாக என்.ஐ,ஏ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.