

ஏழை, நடுத்தர மக்களுக்கு ரயில் முன்பதிவு டிக்கெட் குதிரைக் கொம்பாகிவிட்டது. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதள வேகம் அதிகரிப்பால், கவுன்ட்டர்களில் ஒருசிலரைத் தவிர மற்றவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பதில்லை.
இந்த அதிரடி நடவடிக்கையால், ரயில்வேக்கு வருவாய் இரட்டிப்பாகி உள்ளது. ஆனால், பயணிகளுக்கோ பாதிப்பு இருமடங்காகியிருக்கிறது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் எடுப்பதற்கான வேகம் நிமிடத்துக்கு 1,200 டிக்கெட்டுகளில் இருந்து 7,200 டிக்கெட்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இணையதளத்தில் டிக்கெட் எடுப்பவர்கள் பெரிதும் பயனடைகின்றனர். ஆனால், கவுன்ட்டரில் டிக்கெட் எடுக்க பல மணி நேரம் காத்திருக்கும் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது பல உண்மைகள் தெரியவந்தன.
டிக்கெட் கவுன்ட்டர் காலை 8 முதல் இரவு 8 மணி வரை மட்டும் திறந்திருக்கும். ஐஆர்சிடிசி இணையதளத்தில் இரவு 11.30 மணி முதல் 12.30 வரை ஒருமணி நேரம் தவிர, 23 மணி நேரமும் டிக்கெட் எடுக்கலாம். டிக்கெட் கவுன்ட்டரில் காலை 8 மணிக்குத்தான் முன்பதிவு டிக்கெட் படிவம் கம்ப்யூட்டர் திரையில் வரும். ஆனால், ஐஆர்சிடிசி இணையதளத்தில் எல்லா நேரத்திலும் முன்பதிவு டிக்கெட் படிவம் தயாராக இருக்கும். கவுன்ட்டரில் ஒருவர் டிக்கெட் எடுக்க வரும்போது, அவரது தகவல்களை கம்ப்யூட்டரில் உள்ள முன்பதிவு படிவத்தில் டைப் அடித்து பூர்த்தி செய்கையில், அத்தகவல்களை உறுதி செய்வதற்கான சங்கேத வார்த்தைகள் (captcha) இரு இடங்களில் கேட்கப்படும். அதுபோல, ஐஆர்சிடிசி முன்பதிவு டிக்கெட் படிவத்தில் சங்கேத வார்த்தைகள் கேட்கப்படுவதில்லை.
இதன் காரணமாக கவுன்ட்டரில் ஒருவருக்கு டிக்கெட் கொடுக்க 20 விநாடிகள் வரை ஆகிறது. அதுவே ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஏற்கெனவே தகவல்களை டைப் செய்து தயாராக இருந்தால் ஒரே கிளிக்கில் அதாவது ஒரு நொடியில் டிக்கெட் எடுக்க முடியும்.
ஐஆர்சிடிசி இணையதள வேகம் அதிகரிப்பால், அதில் டிக்கெட் எடுக்கும் ஏராளமானோருக்கு உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட் கிடைக்கிறது. ஆனால், ஓபன் டே (பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு) டிக்கெட் எடுக்கவும், தட்கல் டிக்கெட் எடுக்கவும் முதல்நாள் இரவிலிருந்தே கவுன்ட்டரில் காத்திருப்பவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைக்கிறது. மற்ற எல்லோருக்கும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுதான் கிடைக்கிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.
இப்போது புதிதாக இயக்கப்படும் பிரீமியம் ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட், பயணிகள் பட்டியல் தயாரிக்கும் வரை ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே எடுக்க முடியும். பயணிகள் பட்டியல் தயாரித்த பிறகு, காலியிடம் இருந்தால் மட்டுமே அந்த டிக்கெட்டுகள் கவுன்ட்டரில் விற்கப்படும்.
தபால் நிலையங்களிலும் ரயில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதில்லை என்று பயணிகள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஐஆர்சிடிசி இணையதள வேகம் அதிகரிப்பால், கவுன்ட்டரில் சிலருக்கு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது உண்மைதான். தட்கல் டிக்கெட் எடுப்பவர்களுக்கும் இதேநிலைதான். தெற்கு ரயில்வேயில் கடந்த மே மாதம் இணையதளம் மூலம் 40 சதவீத தட்கல் டிக்கெட்களும், கவுன்ட்டர்களில் 60 சதவீத தட்கல் டிக்கெட்களும் விற்கப்பட்டன. ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ஐஆர்சிடிசி இணையதள வேகம் அதிகரிப்பால், இணையதளம் மூலம் 69 சதவீத தட்கல் டிக்கெட்களும், கவுன்ட்டர்களில் 31 சதவீத தட்கல் டிக்கெட்களும் விற்றுள்ளன.
நாடு முழுவதும் 316 தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் விற்கப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், அங்கிருந்தவர்கள் கவுன்ட்டரைப் பூட்டிவிட்டு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டிக்கெட் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் குறிப்பிட்ட அளவு டிக்கெட்கள் அல்லது குறித்த நேரத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை என்ற நிலையை உருவாக்கினால்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றார் அவர்.
கவுன்ட்டர் டிக்கெட் விற்பனை வருவாய் குறைந்தது
இந்தியா முழுவதும் ரயில் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்காக 3,050 கணினி முன்பதிவு மையங்கள் உள்ளன. அவற்றில் 8,500 கவுன்ட்டர்கள் இருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மொத்த கவுன்ட்டர்களில் விற்பனையான டிக்கெட்டுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,092 கோடி. இது, ஜூலை மாதம் ரூ.975 கோடியாகக் குறைந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஐஆர்சிடிசி இணையதளத் தில் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.997 கோடி. இது, ஜூலை மாதம் ரூ.1,246 கோடியாக அதிகரித்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதள வேகம் அதிகரிப்பால் அதன் வருவாய் அதிகரித்துள்ளது. அதேநேரம், கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை நேர் எதிராக மாறியிருக்கிறது என்று ரயில்வே அதிகாரி குறிப்பிட்டார்.