

ஓட்டல் தொழிலாளி ஒருவரின் செல்போனைப் பறிக்க முயன்ற கும்பல் அவர் தர மறுக்கவே, அவரைக் கத்தியால் குத்திவிட்டு செல்போனை பறித்துச் சென்றது. காயம்பட்ட தொழிலாளி இன்று உயிரிழந்தார்.
சென்னையில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். திருட்டுக்கு மாற்றாக புதுவகையான தொழிலாக செயின் பறிப்பும், செல்போன் பறிப்பும் இருந்தது.
செயின் பறிப்பில் ஒருவகை ஆட்களும், செல்போன் பறிப்பில் வேறு வகை ஆட்களும் ஈடுபட்டு வந்தனர். பெரும்பாலும் இளைஞர்கள், போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், ஆடம்பரச்செலவு செய்து பழக்கப்பட்டவர்கள், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற காரணங்களால் இதில் அதிக அளவில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இருந்தனர்.
இந்நிலையில் இந்த நிலையை மாற்ற காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கண்காணிப்பு கேமராவை சென்னை முழுவதும் பொருத்த நடவடிக்கை எடுத்தார். இதனால் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு 90 சதவீதம் குறைந்தது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்தன. அவர்களும் கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கினர்.
இதையும் மீறி துணிச்சலுடன் சிலர் செயின், செல்போன் பறிப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு நடந்த வழிப்பறியில் ஓட்டல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ராஜகண்ணன் (29). சொந்த ஊரில் வருமானம் சரிவர இல்லாததால் வேலை தேடி, கடந்த 12 நாட்களுக்கு முன் சென்னை வந்தார். பொழிச்சலூர் மகேஷ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தார். அருகிலேயே தங்கும் அறை உள்ளது.
கடந்த 30-ம் தேதி வழக்கம்போல் வேலை முடிந்து ராஜகண்ணன் அறைக்குத் திரும்பினார். பின்னர் நண்பர் பிரசாந்துடன் சேர்ந்து அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றார்.
மதுபோதையில் இருந்த அவரை, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனைப் பறிக்க முயன்றனர். நிலைமையின் விபரீதம் புரியாத ராஜகண்ணன் விலை உயர்ந்த தனது செல்போனைத் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜகண்ணனைக் கத்தியால் சரமாரியாக வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தினர்.
இதைப் பார்த்த அவரது நண்பர் பிரசாந்த் இதைத் தடுக்க முயன்றார். இதில் பிரசாந்துக்கும் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் ராஜகண்ணன், கீழே விழுந்தார். செல்போனைப் பறித்த அந்தக் கும்பல், அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜகண்ணனையும், பிரசாந்தையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வழிப்பறி, கத்திகுத்து சம்பவம் குறித்து தகவல் கிடைத்த சங்கர் நகர் போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கத்திக்குத்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 307 (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 5 நாட்களாக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜகண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். பிரசாந்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
உயிரிழப்பை அடுத்து போலீஸார் வழக்கை 307 மற்றும் 302 (கொலை வழக்காக) மாற்றி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் கார்த்தி என்கிற 20 வயது ஐஐடி மாணவர் சில மாதங்களுக்கு முன் செல்போன் பறிப்பு இளைஞர்களால் தொண்டையில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
அதை அடுத்து லாவண்யா என்கிற மென்பொறியாளர் கடுமையாக கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடி பிழைத்தார். இந்நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.